பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 199


எவை பித்தலாட்டமானவை என்பதை விளக்குவதைத் தாசர் தமது முதற் கடமையாகக் கொண்டு செயல்பட்டார். பேரறிஞர்கள் என்று கருதப்பட்டவர்கள் வெளியிட்ட முடிவுகளையும் முறையாக எடையிட்டு அவற்றின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டும்போது அவருடைய மதி நுட்பமும் வாதத்திறமையும் வெளிப்படும். சுரேந்திரநாத் பானர்ஜி என்னும் வங்க அறிஞர் ஆங்கிலத்தில் பேச்சாற்றல் மிக்கவர். அவர் இந்தியாவில் உள்ள அமைதியற்ற சூழலுக்கு ஆறு காரணங்கள் என்று சுட்டியவற்றை மறுத்து அயோத்திதாசர் உண்மைக் காரணங்களை அடையாளம் காட்டுதல் அவரது சிந்தனை ஆற்றலைப் புலப்படுத்தும்.

1. இந்தியக் குடிகளை கவர்ன்மென்டார் அடியோடு அவமதித்ததே அமைதியற்ற நிலைக்குக் காரணமென்கிறார். இந்தியாவில் வாசம் செய்யும் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட மநுக்களை மாடு, ஆடு, குதிரை, கழுதை, நாய் முதலிய மிருக ஜெந்துக்களினும் தாழ்ச்சியாக அவமதித்து வருவதுடன் மிக்க இழிவுகூறி நாணமடையச் செய்தும் வருகிறார்களே இதை நமது பானர்ஜியார் அறியார் போலும்.

2. சில சாதியோரை கவர்ன்மென்டார் பட்சபாதமாக நடத்துவதே அமைதியற்ற நிலைக்குக் காரணமென்கிறார்.

ஒர் ஐரோப்பியர் கலெக்டராக வருவாராயின் மற்றும் வேண்டிய எட்கிளார்க், அஜூர் செருசதார், தாசில்தார், உத்தியோகங்களுக்காக ஐரோப்பியர்களையே தருவித்து வைத்துக் கொள்கின்றார்களா, இல்லையே.

இந்து தேசத்திலுள்ளவர்களில் பிராமணர் என்று சொல்லிக் கொள்வோர்களில் ஒருவர் செருசதாராயினும் தாசில்தாராயினும் சேர்க்கப்படுவாராயின் நாலைந்து வருஷத்துக்குள் அந்த ஆபீசு முழுவதும் பிராமணரென்று சொல்லிக் கொள்கிறவர்களே நிறைந்து விடுகிறார்கள். இத்தகைய செயலுள் ஐரோப்பியர்கள் பாரபட்சம் உடையவர்கள, இந்தியர்கள் பாரபட்சமுடையவர்களா என்பதை பானர்ஜியார் அறியார் போலும்.

3. இராணியார் இந்துக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்யாது இராஜிாங்க நிருவாகத்தில் ஒதுக்கி வைத்தலே அமைதியற்ற செயலுக்குக் காரணமென்கிறார்.

இந்தியர்களுக்குக் கொடுத்துள்ள சுதந்திரங்களைக் கேட்போர்கள் தற்காலம் பெற்றிருக்கும் சுதந்திரங்களில் சகல சாதியோர்களும் அநுபவிக்கும்படியான வழிகளைத் திறந்திருக்கிறார்களா, அடைத்திருக்கிறார்களா என்பதை நமது பானர்ஜியார் அறியார் போலும்