பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 201


சுரேந்திரநாத் பானர்ஜி இந்தியச் சமுதாயத்தின் உண்மை நிலை அறியாதிருப்பதையும் அதனைத் திருத்துவதைத் தமது முதற் கடமையாகக் கொண்டிராமல் யார் யாரையோ தேவையில்லாமல் குற்றம் சாட்டுகிறார் என்பதை எடுத்துக்காட்டும் தாசர் காங்கிரஸ் தலைவர்கள் இந்நாட்டில் அடித்தள மக்களின் வாழ்க்கையைப் பற்றி அறியாமலும் அறிந்து கொள்ள முயலாமலும் அது பற்றிச் சற்றும் கவலை கொள்ளாமலும் இருக்கும் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

பிராமணர் அல்லாதார் சிலர் சேர்ந்து கொண்டு நான்பிராமின்ஸ் (Non-Brahmins) சங்கம் என்று ஒன்று தொடங்கியபொழுது ‘நான் பிராமன் கூட்டத்தோரென்றால் யாவர்’ என்ற தலைப்பில் அத்தகைய சங்கத்திலிருக்கும் உள் முரண்பாடுகளை எடுத்துக்காட்டி அவர்களுடைய நோக்கங்களைத் தெளிவுபடுத்துமாறு தாசர் வேண்டுகோள் விடுத்தார்.

தற்காலம் பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதி யென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதி பேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தவர்களையே சேர்ந்தவர்களாகும்.

சைவம், வைணவம், வேதாந்தம் என்னும் சமயங்களையும் அப்பிராமணர் என்போர்களே ஏற்படுத்தி அச்சமயத்தை எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே யாவர் . . .

ஆதலின் இவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் ஒவ்வொருவரும் தற்காலம் தோன்றியிருக்கும் ‘நான் பிராமன்ஸ்’ என்போர் யாவரென்றும் அவர்கள் கூட்டத்தின் கருத்துக்கள் யாதென்றும் தெரிவிக்கும்படிக் கோறுகிறோம்.

கூட்டவோட்டச் செலவுகள் யாவும் எங்களைச் சார்ந்தது. ஆட்டபாட்டச் சுகங்கள் யாவும் ஐயரைச் சார்ந்தது என்பாராயின் யாது பலன் என்பதேயாம் (அலாய்சியஸ் 1183-84).

சாதிப் பாகுபாடுகளையும் சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் தழுவிக் கொண்டே நான்பிராமின்ஸ் என்று சங்கம் கூடியிருக்கின்றனரா அன்றேல் சாதியாசாரங்களையும் சமய ஆசாரங்களையும் ஒழித்து அத்தகைய சங்கத்தை அமைத்துள்ளனரா வென்று தாசர் கேட்ட கேள்வி தொலைநோக்குடையதாகும். பின்னால் வந்த நீதிக்கட்சியினர் பலர் சாதி ஆசாரங்களை ஏற்றுக் கொண்டு அரசாங்கத் துறைகளில் பல சாதியாருக்கும் பதவிகள் வழங்க வேண்டுமென்பதை முதல் குறிக்கோளாக வைத்துப் போராடினர்.