பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

எட்டு மார்க்கங்களை உடையவர்களும் நான்கு வித வாய்மை உடையவர்களும் தர்க்கத்தில் தேர்ந்து அதன் பலனைக் கண்டடைந்த சங்கத்தை யாங்கள் துணைக் கொள்கிறோம் (ஆதிவேதம் 196).

புத்தாங்க சரணம், தர்மாங்க சரணம், சங்காங்க சரணம் எனும், இம்மூன்று, மாந்தர்களுக்கு நன்னெறியில் செல்ல வழிகாட்டும் உண்மையான கீதோபதேசங்களாகுமேயன்றி வருண பேதத்தை வற்புறுத்தும் கண்ணன் சொல்லியதாகக் கூறப்படும் கீதை நன்னெறிக்கு உதவாதது என்பது அயோத்திதாசரின் எண்ணமாம்.

புத்த சமயக் கொள்கைகள் சிலவற்றை உள்வாங்கிக் கொண்டு அவற்றை இந்து சமயக் கொள்கைகளாக விளம்பரம் செய்து புத்தரைத் திருமாலின் அவதாரங்களில் ஒருவரெனக் கூறி இந்து சமயத் தலைவர்கள் அவருக்குத் தங்கள் தொன்மங்களில் ஓரிடத்தைக் கொடுத்து புத்த சமயத்தை இந்தியாவில் வலுவிழக்கச் செய்தார்கள் என்பது இதுகாறும் சொல்லப்பட்டு வருகின்ற வரலாறு. இதற்கு எதிர்த் தொன்மம் (Counter myth) ஒன்றைப் படைக்கிறார் அயோத்திதாசர். இந்து சமயம் புத்தர் காலத்திற்குப் பின் வந்ததென்றும் இந்துக் கடவுளர்களைப் பற்றிய புராணங்கள் யாவும் புத்தர் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டன வென்றும் தமது தொன்மத்தின் மூலம் நிறுவுகிறார். புத்தரே ஐந்து இந்திரியங்களையும் அடக்கியாண்டதால் ஐந்திரன், இந்திரன் என்று பெயர் பெற்றதாகவும் சிவன், திருமால், விநாயகன், குமரன் போன்ற இந்துக் கடவுளர்களின் பெயர்களெல்லாம் அவருடைய பெயர்களேயென்றும் அவர்களுடைய செயல்களாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளனவற்றில் பல அவருடைய செயல்களேயென்றும் பாலி, தமிழ் மொழிகளிலுள்ள பழம் நூல்களின் ஆதாரங்களைக் கொண்டு தமது தொன்மத்தைக் கட்டமைத்துக் கொள்கிறார்.

புத்தரே பகவன், காசி விசுவநாதன், தருமராஜன், கங்கையாதாரன், ஜகத்ரட்சகன், குமரக்கடவுள், மாதவன், விநாயகன், கமலநாதன், தேவாதி தேவன், எண் குணத்தோன், சக்கரவர்த்தித் திருமகன், ஜெகந்நாதன், ஒப்பிலாவப்பன், நடராசன், சுடலையாடி, சுப்ரதீபன், சின்மயமுத்ரன், தேசிகன், மாமறையோன், வீணைகோபாலன், அமலன், யானை உரணத்தோன், ஆதிமூலன், மூவாமுதல்வன், சங்கரன், திருமூர்த்தி, திருமால், உலகநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். மகடபாஷையாகிய பாலி ஒலி வடிவாயிருந்தபடியால் சகட பாஷையாகிய வடமொழி வரிவட்சரங்களையும் திராவிட பாஷையாம் தமிழ் மொழி வடிவட்சரங்களையும் உண்டு செய்து வடமொழியைப் பாணினிக்கும் தென்மொழியை அகஸ்தியருக்கும்