பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 25


புத்தரின் வரலாற்றின் நிகழ்ச்சிகளாக அயோத்திதாசர் தொகுத்துரைப்பன யாவும் இந்துத் தொன்மங்களில் கடவுளரின் செயல்களாகக் கூறப்பட்டுள்ளனவற்றிலிருந்து ஒருவகையில்பெரிதும்வேறுபட்டிருக்கக் காணலாம். புத்தரின் உயர்வைக் காட்டும் இயற்கையிகந்த நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டிருப்பினும் புராணங்களிலுள்ள தெய்வங்களைத் தரம் தாழ்த்தும் ஆபாச, அருவருப்பூட்டும் நிகழ்ச்சிகள் அறவே நீக்கப்படுகின்றன. யாவும் பிறவுயிர்களிடத்துக் காட்ட வேண்டிய அன்பை வலியுறுத்தும் புத்தருடைய கோட்பாடுகளை வற்புறுத்தவே கட்டமைக்கப் பட்டுள்ளன. புத்தர் இந்த நாட்டிலுள்ள முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணை நிலங்களுக்கும் சென்று மக்களுக்கு வாழும் வழிகளையும், தொழில்களையும் அறத்தையும் கற்பிக்கிறார். ஒடுக்கத்தால் உண்டாகும் இன்பமும் விரிவால் உண்டாகும் கேடும் அவரால் விளக்கப்படுகின்றன. அன்பே சிவம் என்னும் திருமூலர் கருத்திற்கேற்ப அருளே உருவாய்த்திகழ்கிறார் அயோத்திதாசர் காட்டும் புத்தர். அவர் வாழ்க்கை நிகழ்வுகளில் கீழான எண்ணங்களுக்கு இடமில்லை. மறுமை பற்றியோ, உலகைத் தோற்றுவித்தவராகக் கருதப்பெறும் இறைவனைப் பற்றியோ, மோட்சம், நரகம் எனும் கற்பனை உலகங்கள் பற்றியோ ஊகங்கள் ஏதும் உண்மைகள் போல் சொல்லப்படுவதில்லை. மகட பாஷையில் சிவம், பிரமம், ஈசன் என்று சொல்லப்படுபவை சகடபாஷையில் இதம், சாந்தம், தன்மம் ஆகுமென்றும் அவையே திராவிடபாஷையில் அன்பு, தண்மை, ஈகையென்றும் விளக்கப்படுகின்றன. அன்பையும் பிறவுயிர்களின் குற்றங்களைப் பொறுத்து ஆதரிக்கும் பண்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அன்பு, ஈகை, சாந்தமெனும் அமுதைத் திரட்டுங்கள் என்றும் புத்தவேதம் அவரது வாழ்க்கை வரலாறு மூலம் போதிக்கிறது.

இந்து சமயத் தொன்மங்களில் பலவற்றைக் கட்டுடைத்து அவற்றிலுள்ள முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் விளக்கி அவை மக்களுக்கு நன்மை செய்யாமல் தீமை விளைவிக்கும் என்பதையும் எடுத்துக்காட்டி அவற்றை ரச மாற்றம் செய்து பெளத்த அறத்தை அடிப்படையாகக் கொண்ட தொன்மங்களாக மாற்றி அவற்றின் மூலம் யாவர்க்கும் நன்னெறி புகட்டும் முயற்சியில் அயோத்திதாசரால் எழுதப் பெற்றுள்ள கட்டுரைகள் மிகப்பல. குறிஞ்சி நிலத் தலைவனென்றும் தமிழ்க் கடவுளென்றும் போற்றப்பட்ட முருகன் சிவனுடைய மைந்தனாகிய சுப்ரமண்யக் கடவுளேயென்று அவனுடைய பிறப்புப் பற்றிய தொன்மத்தைப்