பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 45


வேண்டியவையென்றும் கடைசியாக வந்த உபநிடதங்களின் உபதேசங்கள் வேதாந்தம் என்று அழைக்கப்படுகின்றனவென்றும் இவைகளுக்குள் முரண்பாடு ஏதும் இல்லையென்றும் மந்திரங்கள் கூறும் சடங்குகளை பிராமணங்களும் மெய்யுணர்வுக் கூறு(Mystical Elements)களை ஆரண்யகங்களும் உபநிடதங்களும் வலியுறுத்தினும் உபநிடதங்கள் வேதங்களினின்றும் வேறுபடுகின்றனவென்று கூற முடியாதென்றும் அவை வேதங்களின் விளக்கங்களாகவும் விரிவாக்கங்களாகவும் கருதப்பட வேண்டியவையென்றும் உபநிடதங்களைப் பற்றி எழுதியுள்ள ராதாகிருஷ்ணன், டி.எஸ். சர்மா (D.S.Sharma)போன்றோர் கருத்தறிவிப்பர்.

உபநிடதங்களின் பாடுபொருள்கள் என்று சர்மா அடையாளம் காட்டுபவை நான்கு: (1) அவை பிரமன், ஈஸ்வரன் ஆகிய இரண்டு பற்றியும் பேசுகின்றன. இவ்வுலகத்தோடு தொடர்புபடுத்தி மனிதர்களின் கண்ணாடி கொண்டு பார்க்கப்படும் கடவுள் ஈஸ்வரன் ஆவார். இவ்வுலகத்தோடு தொடர்புபடுத்தப்படாமல் கடவுளாகவே பார்க்கப்படுபவர் பிரமன் ஆவார். பின்னால் வந்த சாத்திரங்களில் இவர்கள் சகுண பிரமனென்றும் நிர்குணபிரமனென்றும் அறியப்பட்டனர். (2) அவை எல்லாப் படைப்புகளிலும் மறைந்துள்ள ஆன்மீக வளர்ச்சியையும் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளுக்கும் அது பொருந்துமாற்றையும் கண்டு எடுத்துரைத்தன. (3) அவை மனிதனின் அகநிலை (Inner being) பற்றிய உள்ளொளிகளைத் தருகின்றன.(4) மனிதன் வாழ்வு, இறப்பு மூலமாக இவ்வுலகில் பெறும் வளர்ச்சி பற்றியும் பேசுதற்கரிய பிரமத்தில் அவன் விதி இறுதி அடைவதைப் பற்றியும் அவை விரிவாக விளக்குகின்றன.

உபநிடதங்கள் பற்றி இத்தகைய பாராட்டுகள் குவிக்கப் பட்டிருந்தாலும் அவற்றை ஆழ்ந்து நோக்குவார் வேறு முடிவுகள் எடுக்க நேரும். வேதங்களினின்றும் அவை மாறுபடவில்லையென்று கூறும் சர்மாவே “உபநிடதங்கள் ஒரு கீழ்த்தரமான வேள்விச் சமயத்தை (A rather low type of sacrificial religion) எக்காலத்திற்கும் பொதுவான ஓர் அரிய மெய்யுணர்வுச் சமயமாக (A great mystical religion) மாற்றும் பெரிய பணியில் ஈடுபட்டன” என்று கூறுவார் (சர்மா, 2). ஆனால் வேள்விச் சமயத்தையும் வேள்வியையும் புகழ்ந்து பாடும் இடங்கள் உபநிடதங்களிலும் உண்டு. சுவேதாஸ்வதர உபநிஷதம்,

எல்லாக் கடவுளரும் வாழும் மிகவுயர்வான, மாறுபாடு அடையாத விண்ணுலகில் இருக்கு வேதமும் உள்ளது. அவனை அறியாதவன் இருக்கு வேதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வான்? இதைத் தெரிந்தவர்களே அமரத்துவம் அடைவார்கள்.