பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 63


பெண்ணை வாழ்க்கைத் துணை என்று அழைத்து ஒரு தனி அதிகாரத்தில் அவள் நலம் பேசுவார். ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒழுங்கை வற்புறுத்தும் முறையில்,

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின் (54)

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (57)

என்றெல்லாம் பெண்ணின் பெருமை பேசுவார். ‘பிறனில் விழையாமை’ எனும் அதிகாரத்தில் பிறன்மனை நோக்காப் பேராண்மையென்றும்,

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரில் பேதையார் இல் (142)

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்

பெண்மை நயவாமை நன்று (150)

என்றும் விதந்து கூறுவார். பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலே ஒருவன் தன்னை ஆண் குழந்தை பெற்று நரகத்திலிருந்து காத்துக் கொள்ளவே என்று மனுநூல் கூற, வள்ளுவர் மக்களைப் பெறுதல் இல்லறத்துக்குச் சிறப்பு என்பதை,

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன் மக்கட்பேறு (60)

என்று மக்களால் இவ்வாழ்வில் பெறும் இன்பத்தை

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ் (64)

மக்கள் மெய்திண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற் கேட்டல் இன்பம் செவிக்கு (65)

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்

மழலைச் சொல் கேளாதவர் (66)

என்றெல்லாம் மெய்மறந்து பாடுவார். மனிதவினத்தில் பாதியான பெண்ணோடு இணைந்து மக்களைப் பெற்றுவாழும் இல்லறச் சிறப்பை இவ்வாறு போற்றும் அறநூலையோ, சமய நூலையோ வேறெங்கும் காண்பது அரிது.