பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

உடையவனாய், ஞாயிற்றையும் திங்களையும் கண்களாகக் கொண்டவனாய், கனல் போலும் முகத்தினனாய், ஒளியால் முழு உலகையும் கொளுத்துவோனாய் உன்னைக் காண்கின்றேன் (11. 15-19).

என்று வியந்துரைக்கின்றான்.

கண்ணன் பார்த்தனிடம் “யான் அருள் கொண்டு ஆத்மயோகத்தால் எனது உருவை உனக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய், அனைத்துமாய், எல்லையற்றதாய் உள்ள இவ்வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது. வேதம், வேள்வி, கல்வி, ஈகை, செயல் ஆகிய எதனாலும் மனித உலகத்தில் என்னை இவ்வடிவில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது” (11. 47–48).

என்று கூறவும் காண்கிறோம்.

இங்கு மட்டுமல்லாமல் இன்னும் பலவிடங்களிலும் இறைவனின் பெருமை இறைவன் கூற்றாகவே வருகிறது.

யான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களுக்கெல்லாம் இறைவன். எனினும் யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன் . . . எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் நான் பிறப்பெடுக்கிறேன். நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் அறத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன் (4. 6-8).

நான் உலகம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் ஆவேன். என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் எதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வுலகமெல்லாம் என் மீது இணைக்கப்பட்டது.

நான் நீரில் சுவை ஞாயிற்றிலும் திங்களிலும் ஒளி, எல்லா வேதங்களிலும் நான் பிரணவம், வானில் ஒலி நான்; ஆண் மக்களிடம் நான் ஆண்மை.

மண்ணில் தூய மணமும் தீயில் சுடரும் நான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான். தவம் செய்வோரின் தவம் நான். எல்லா உயிர்களுக்கும் நான் சாதனமாகிய விதை, புத்தியுடையோரின் புத்தி நான்; ஒளியுடையோரின் ஒளி நான் (7. 6-10).

இவ்வாறு யாவரும் அறிந்த இறைவனின் தன்மைகள் மீண்டும் மீண்டும் இறைவனாலேயே எடுத்துச் சொல்லப்பெறும். இவையெல்லாம் பார்த்தனின் கூற்றாகவோ, கவியின் கூற்றாகவோ இருந்திருந்தால் ஓரிடத்தில் மட்டும் வலியுறுத்தப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.