பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 85


என்ற குறள்களில் சொல்லப்படும். இதனையே சுக்கிரநீதி

அரசன் காமம், வெகுளி, மோகம், உலோபம், மானம், மதம் என்னும் இவ்வறுவகைக் குற்றங்களையும் களைதல் வேண்டும். இவை அங்ஙனம் களையப்படின் அவன் இன்பம் நுகர்பவனாவான் (ப. 20).

என்றுரைக்கும். “தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை’ (964) என்று தமிழ் நூல் கூறுவதை வடநூல்,

பற்களும் மயிர்களும் உகிர்களும் தமக்குரிய இடங்களினின்றும் இழிந்தக்கால் விளக்கம் எய்தா. அங்ஙனமே அரசனும் தன்னிலையினின்றும் இழிந்தக்கால் விளக்கமுறான். அரசன் கடக்க முடியாத கேடு நேர்ந்துழி மலையரண் வாய்ந்த இடத்தையடைதல் வேண்டும் (ப. 53).

என்று அரசர்களுக்கு ஏற்றிச் சொல்லும். வள்ளுவர் “பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந் தாள்வினையின்மை பழி’ என்று கூறுவதை வட நூலாசிரியர்,

முயற்சிக்குப் பயனின்றாதல் ஊழ்வலியானாம். அது பற்றி முயற்சி குற்றமுடையதாகாது. தன் முயற்சி அனைத்தும் எவ்வாற்றானும் பயனின்றிக் கழிதலைக் காணின் எஞ்சிய வாழ்நாளில் தவம் செய்து மேலுலகம் எய்தக்கடவன் (பக் 53-54).

என்று மேலுலகம் பற்றிய தமது எண்ணத்யுைம் சேர்த்துக் கூறுவார். “அதாவது அணுகாது தீக்காய்வார் போல்க, இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்” என்று வள்ளுவர் கையாளும் பொருள் ஆழம் கொண்ட உவமை, வடநூலில்,

வணக்கம் முதலியன நன்கு பயின்ற அவன் (அரசியல் வினை செய்வான்) உயிர்க்கும் பொருட்கும் தலைவனும் பிரபுவுமாகிய வேந்தனை எரிகின்ற நெருப்பைப் போலவும் சினமிக்க பாம்பைப் போலவும் கருதி அவன் பக்கல் அணுக வேண்டும் (ப. 82)

என்று நயமிழந்து அச்சத்தை மட்டும் சுட்டும் பாம்பென்னும் உவமையோடு சேர்ந்து இடம்பெறும். அரசனால் பெறும் பயனை அவ்வுவமை குறிக்காது போதல் தெளிவு.

கெளடலீயத்தையும் அதன் சுருக்கமாகிய காமாந்தக நீதி என்னும் நூலையும் சுக்கிர நீதியோடு ஒப்பிட்டு ஆய்வு செய்த வங்க அறிஞர் பினாய்க்குமார சர்க்கார் மூன்றனுள் இதுவே இந்திய அரசியல் நாகரிகத்தை விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவது என்று பாராட்டுவார் (ப. 18). திருக்குறளின் தாக்கம் மிகுதியாக இருத்தலால் இது நீதி நூல் என்ற முறையிலும் மற்ற இரண்டைக் காட்டிலும்