பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 87


வாழ்தலும் மட்டுமே மாந்தர் வாழ்க்கையின் ஊதியமென்பதும் வள்ளுவர் வற்புறுத்தும் வாழ்க்கை நெறியாகும். மனுநூல், சுக்கிரநீதி, கெளடலீயம் போன்ற வடநூல்களும் பிறவும் இத்தகைய வாழ்க்கை நெறியைச் சொல்லவில்லை. நல்லது செய்வார்க்கு விண்ணுலக இன்பமும் அல்லது செய்வார்க்கு நரகத் துன்பமும் உறுதி என்று அச்சுறுத்தும் முறையிலேயே அவற்றில் அறம் பரிந்துரைக்கப் பெறுகிறது. மேலுலகம், கீழுலகம், மறுபிறப்பு ஆகியவற்றில் உள்ள நம்பிக்கை தகர்க்கப்பட்டால் அந்நூல்கள் கூறுபவையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு இவ்வுலக மனித வாழ்வு சீர்குலையவும் மனித சமுதாயம் முற்றும் விலங்கு வாழ்வைத் துணிந்து மேற்கொள்ளவும் வழியேற்படும். அப்பாதையில் மனிதவினம் விரைந்து சென்று கொண்டிருப்பதும் கண்கூடு. வள்ளுவர் கூறும் அறநெறியின் சிறப்பு மாந்தரால் உணரப்பட்டால் இத்தகைய இழிநிலை ஏற்பட வழியில்லை.

சுக்கிர நீதி பல அதிகரணங்களில் வீடு பேறு பற்றிய ஆசையையும் நரகம் பற்றிய அச்சத்தையும் முன்னிறுத்துகிறது. அரசர்களுக்கும் இத்தகைய அறிவுரையே சொல்லப்படுகிறது.

வாத்சியாயனரின் காமசூத்திரத்திலும், வள்ளுவரின் காமத்துப்பாலிலும் உள்ள ஒப்புமைப் பகுதிகளை அடையாளம் கண்டு, காமசூத்திரத்தின் பெருமையை வியந்து பேசியவர்கள் இப்பொழுது அவைகளுக்கெல்லாம் மூலம் திருக்குறள் என்று ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெண்டி டோனிகர் (Wendy Doniger), சுதிர் கக்கர் (Sudhir Kakar) ஆகியோர் மொழிபெயர்த்துள்ள காமசூத்திரத்தின் முன்னுரையில் அந்நூலின் காலம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்து வருமாறு:

காமசூத்திரம் கி.பி. 225க்குப் பிறகு எழுதப் பெற்றிருக்க வேண்டும். மேற்கிந்தியாவின் அரசியல் நிலை பற்றி வாத்சியாயனர் விளக்குபவற்றிலிருந்து ஆந்திராவை அபிரர்களும் ஆந்திரர்களும் ஆண்டதாக அறிகிறோம். கி.பி. 225 வரை அந்நிலம் ஆந்திரர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது. காமசூத்திரம் மொழிநடையில் அர்த்தசாஸ்த்திரத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ஓரிடத்தில் அர்த்தசாஸ்திரத்தை நேரடியாக மேற்கோள் காட்டும் காமசூத்திரம் வேறிடத்தில் மறைமுகமாக அதனைச் சுட்டுகிறது.அர்த்தசாஸ்திரத்தின் காலம் உறுதியாகத் தெரியவில்லையாயினும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாமென்று நம்பப் பெறுகிறது.

காமசூத்திரம் தர்மம், அர்த்தம், காமம் எனும் மூன்று உறுதிப் பொருள்கள் அல்லது திரிவர்க்கங்கள் பற்றிய விவாதத்துடன் தொடங்குகின்றது.