பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 89


இப்பகுதியை விளக்கும் டோனிகர் தும்மலின்போது (இதயம் ஒரு குறுவினாடிப் பொழுது நின்று விடுவதால்) உயிர் உடலை விட்டே தற்காலிகமாக நீங்கி விடுகிறதென்னும் நாட்டார் நம்பிக்கையை எடுத்துரைப்பார் (டோனிகர், 207).

திருக்குறளில் காமத்துப்பாலின் “புலவி நுணுக்கம்” எனும் அதிகாரத்தில் தும்மலைப் பற்றி மூன்று பாடல்கள் பேசுகின்றன.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம் தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து (1312).

யாம் அவரோடு ஊடி உரையாடாது இருந்தபொழுது, அவ்வூடல் நீங்கி அவரை நீடு வாழ்கவென்று வாழ்த்தி உரையாடுவோமெனக் கருதி அவர் தும்மினார்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யார் உள்ளித் தும்மினிர் என்று (1317).

யான் தும்மினேனாகத் தன் இயல்பால் வாழ்த்தினாள். அவ்வாறு வாழ்த்தியதைத் தானே மறுத்து உம்மை நினைத்து வருந்துகின்ற பெண்களுள் யார் நினைத்தலால் தும்மினீர் என்று கேட்டுப் புலந்து அழுதாள்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்

எம்மை மறைத்திரோ என்று (1318).

எனக்குத் தும்மல் வந்தபோது யார் நினைக்கத் தும்மினீரென்று கேட்பாளென்பதற்கு அஞ்சி அதனை நான் அடக்கினேன். அவ்வாறு அடக்கவும் உம்மைச் சார்ந்தவர் நினைப்பதை மறைப்பதற்காகத் தும்மலை அடக்கினீரோ வென்று சொல்லிப் புலந்து அழுதாள்.

இப்பாடல்களுக்கு உரையெழுதும் பரிமேலழகர்

“தும்மியக்கால் வாழ்த்துதல் மரபு”

“அன்புடையார் நினைத்த வழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றுமென்பது மகளிர் வழக்கு. இவ்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாளென்பதாம்”

“தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றம் ஆயக்கால் செயற்பாலது யாதென்பதாம்” (பரிமேலழகர் 498 - 502)

என்று அழகிய விளக்கங்கள் தருவார். எங்கும் தும்மல் பற்றிய இந்நம்பிக்கை வடநூல் மரபென்றோ வடவர் வழக்கென்றோ