பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


தொடர்ந்து எழுதி வந்த உரை அவரது இறப்பால் 55 அதிகாரங்களோடு முற்றுப் பெற்றது வருந்துதற்குரியது. புத்த சமயத்திற்கும் சமணத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புறக்கணித்த தாசர் திருக்குறளை ஒரு புத்த, சமண நூலாகவே கருதி எல்லாக்குறள்களுக்கும் அவ்வடிப்படையிலேயே பொருள் கூறுகிறார்.

“கடவுள் வாழ்த்தைப்” புத்தரது சிறப்புப் பாயிரமாகக் கொண்டு அதன் பத்துப்பாக்களும் புத்த பிரானையே போற்றும் என்று அவர் விளக்கம் தரக் காணலாம். முதல்குறள் புத்தரை ஆதிபகவன் என்று அழைக்கிறது. எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாயிருந்து அறிவை விளக்குதல்போல் பகவனாகிய புத்தர் யாவர்க்கும் அறிவளிக்கும் முதல்நூல் தந்த முதல்வன் ஆவார். அன்னார் உலகிற்கே குருவாகி தன்னவன்- அந்நியன், தாழ்ந்தவன்- உயர்ந்தவன், கற்றவன்- கல்லாதவன், செல்வந்தன்- ஏழை, சிறியவன்- பெரியவன் எனும் வேறுபாடு கருதாது, எறும்பு முதல் யானை ஈறாகவுள்ள எல்லாவுயிர்களிடத்தும் அன்பு பாராட்டி, பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு என்னும் துன்பங்களைப் போக்குதற்காய்த் தரும சங்கங்களை நிலைநாட்டி, அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞானம் தோன்றச் செய்தமையால் பகவனென்னும் பெயர் அவர்க்குரியது (அலாய்சியஸ் II 569). இருளை விலக்கும் கதிரவனுக்குப் பகலவன் எனும் பெயர் ஏற்பட்டது போல் காமவெகுளி மயக்கமெனும் அஞ்ஞான இருளை அகற்றிச் சாந்தம், ஈகை, அன்பென்னும் பண்புகளைத் தந்தமையால் புத்தருக்குப் பகவன் என்னும் பெயரை மேலோர் வகுத்தனர். மண்டல புருடன் “பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்றும் திருமூலர் “ஆதிபகவன் அருமறை ஒதுமின்” என்றும் இடைக்காட்டுச் சித்தர் “ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல் சோதி பரகதிதான் பசுவே சொந்த மதாகாதோ” என்றும் திருத்தக்க தேவர் “பாடல் வண்டாற்றும் பிண்டி பகவனதானை போல்” என்றும் குறிப்பிடுவது புத்தனையே என்பது தாசரின் முடிவு. புத்தபிரானை மகட மொழியில் பகவனென்று கூறியதைப்போல் திராவிட மொழியில் திவாகரர் என்று வழங்கினர். எழுத்துக்களில் முதலாவதான அகரத்தின் சிறப்பைக் கூறும் தாசர் அதன் பெருமையறிந்த மேலோர் மக்கள் தங்கள் இல்லங்களில் அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, அம்மான், அத்தை என வழங்கும் சொற்களால் எக்காலும் அகரத்தை உச்சரிக்கச் செய்துள்ளது காண்க வென்பார்.