பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 97


இரண்டாவது குறளில் வரும் ‘வாலறிவன்’ எனும் தொடருக்குப் “பால வயதிலேயே அறிவின் விருத்தி பெற்று ஜகத் குருவாக விளங்கிய புத்தன்” என்று பொருள் கூறி அதற்குச் சான்றுகளாக அமுதசாகரர் “அறிவனை வணங்கி அறைகுவன் யாப்பே” என்றும் குணசாகரனார் “ஆசனத்திருந்த திருந்தொளி அறிவன்” என்றும் இளங்கோ “ஆதியிற்றோற்ற அறிவனை வணங்கி” என்றும் முனைப்பாடியார் “அறிவனை வணங்கி அடவித் துணையா” என்றும் கூறியுள்ளனவற்றை மேற்கோள் காட்டுவார்.

மூன்றாவது குறளில் வரும் “மலர்மிசை ஏகினான்” எனும் தொடர் பதுமாதனமென்னும் தாமரை மலரில் வீற்றுப் பதுமநிதி எனும் பெயர் பெற்றுத் ததாகதமுற்றுக் காமனையும் காலனையும் வென்று நித்தியானந்தம் பெற்றோன் என்றும் கல்லால மரத்தின் கீழ்க் கமலாசனத்தில் வீற்றுக் கமலநாதன் என்னும் பெயருடையோன் என்றும் போற்றப் பெறும் புத்தனையே குறிக்கும் என்பதற்குப்பின் கலை நிகண்டு “மூலருற்று நடந்த வாமன்” என்றும் திருமந்திரம் “கடந்து நின்றான் கமலா மலர் மீதே” என்றும் சீவகசிந்தாமணி “விண்டலர் பூந்தாமரையின் விரைததும்ப மேல் நடந்தான்” என்றும் சூளாமணி “விரைமணங்கு தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்” என்றும் அறநெறிச் சாரம் “தாமரைப் பூவின் மேற்சென்றான் புகழடியை” என்றும் சிலப்பதிகாரம் “மலர்மிசைச் சென்ற மலரடிக்கல்லதென்” என்றும் வாசிட்டம் “புண்டரீக வாதனத்தில் புத்தன் போல் உத்தர முகனா” என்றும் “வீரசோழிய உதாரணச் செய்யுள் உறுதாமரை மேல் உறைவார் தன்” என்றும் வாழ்த்தியிருக்கும் வரிகளை எடுத்துத் தருவார்.

எட்டாவது குறளில் வரும் “அறவாழி அந்தணன்” எனும் தொடருக்குத் தருமச் சக்கரத்தோனாம் சாந்த ரூபியாகிய புத்த பிரானே என்று பொருள் கூறி மணிமேகலையில் “அறவியங்கிழவோன் அடியிணையாகி பிறவியென்னும் பெருங்கடல் விடூஉ” என்றும் “ஆதிமுதல்வன் அறவாழியாவோன் பாதபீடிகை பணிந்தனனேத்தி - என்றும் “அறக்கதிராழி திறப்பட வுருட்டிய, காமற்கடந்த வாமன்பாதம்” என்றும் வரும் அடிகளைச் சான்றாகக் காட்டுவார். ஒன்பதாவது குறள் இறைவனை “எண்குணத்தான்” என்று அழைக்கும். தாசர் புத்தருக்குரிய ஆயிரம் பெயர்களில் “எண்குணன்” என்பது ஒன்றென்றும் தோலாமொழித் தேவர் “சோதியும் பேரெண்குணனும் துப்புரவுந்துன்னுவரே” என்றும் “கடையில் எண்குணத்தது காகராகர்க” என்றும் மண்டல புருடன் “அநகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன்” என்றும்