பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


பிடித்து இழுத்து அமர்த்திய ரமேஷ், "என்ன இருந்தாலும், ஹாஸ்டலில் நாம் பண்ணின ரகளை இத்தனை சீக்கிரம் பிரின்ஸ்பாலுக்குப் போய் விடும் என்று நான் எண்ணவே எல்லே,” என்றான்.

இதைக் கேட்டதும் கணபதி பெரிசாகச் சிரித்தான். "ஏண்டா ரமேஷ், நீங்க எல்லாருமாச் சேர்ந்து தானே சுப்பையாவை, பிரின்ஸ்பால்கிட்டேப் போய்ச் சொல்லு, சொல்லுன்னு, போட்டு அடிச்சீங்க, சொல்லிப்பிட்டான்.

அது மட்டுமா, நீங்க ஹாஸ்டல் மேஜை நாற்காலிகளை உடைச்சது; பொருட்களை நாசம் பண்ணினது; அதை விசாரிக்க வார்டனை மரியாதைக் குறைவாகப் பேசி அவமானப்படுத்தினது, எல்லாத்தையுமே போய்ச் சொல்லிப்பிட்டான். இப்ப வந்து பயந்து என்ன பண்ணறது?"

உடனே மூர்த்தி சற்று கோபமாக, "ஏய் கணபதி, நாங்க பயப்படறதா யாருடா சொன்னது? எங்களையும் உன்னைப் போல கோழைன்னு நினைச்சியா?" என்று கேட்டான்.

"பார்க்கத்தானே போகிறேன். முதல்வர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?"

"தெரியாமே என்ன! சர்வர் சுப்பையாவை கைநீட்டி அடிச்சது மன்னிக்க முடியாத குற்றமாம். இதிலே சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் சுப்பையா கிட்டே மன்னிப்புக் கேக்கணுமாம், அதுதானே!"

"அது மாத்திரமில்லே ரமேஷ், ஹாஸ்டல்லே நீங்க சேதப்படுத்தினதுக்குண்டான விலையை அபராதத்துடன் கட்டி, வார்டன் கிட்டே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கணுமாம். இல்லேன்னா கடுமையான நடவடிக்கை எடுக்கப் போகிறாராம்."

ஒ . மா.-2