பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 சு.சமுத்திரம் 0

நாங்கள் எப்படிக் கண்டுபிடிப்பது... கலியுக வரதா...?”

 "தேவ ரகசியத்தை சொல்லக் கூடாது... ஆனாலும் சொல்கிறேன்... தமிழகத்தில், இன்னும் இரண்டு தலைமுறைகள் கடந்து, மூன்றாவது தலைமுறையில் கலி முற்றும்... வீடு கட்டி பலனில்லை என்று பெரும்பாலான மக்கள், வீதியில் கிடப்பார்கள்... மருத்துவமனைகளில் பட்டு மெத்தைகளும், குளிர் சாதனப் பெட்டிகளும் தொலைத் தொடர்பு சாதனங்களும் வைக்கப்படும்... ஆனாலும் மக்கள் அங்கே செல்வதற்கு தடை விதிக்கப்படும்..."
 வைத்தீஸ்வரன் பிள்ளை பொருள்படப் பார்த்தான். நாரணர் தொடர்ந்தார்.
 "அதோடு, தமிழ்க் கலாச்சாரம் பொங்கி பூரிக்கும். கல்யாண மண்டபங்களில், புதுமணத்தம்பதி அம்மணமாய் ஆடிக் காட்டினால்தான், சமுதாயம் அவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும். புதுக் கணவன், பத்துபேரை காசு கொடுத்தாவது தன்னால் அடிபட்டதுபோல் நடிக்க வைத்தால்தான், அந்த 'வீரக்' கணவனின் இச்சைக்கு இளம் மனைவி உடன்படுவாள்... வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வரவேற்பு வளையம் வைத்தால்தான் அது வெளிப்படும். 'நன்றி தாயே நன்றி என்று பிறந்த குழந்தை, போஸ்டர் போட்டால்தான், பெற்ற தாயே பிள்ளைக்குப் பால் கொடுப்பாள்..."
  நாரணர், மருமகனை ஒரு நமுட்டுச் சிரிப்பாய் பார்த்துவிட்டு, தாள லயத்தோடு தொடர்ந்தார்.
 "எல்லாவற்றிற்கும் மேலாக... தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான பயபக்தியோடு, திரைப்படங்களில் நிசமான ஓநாய்கள்... பன்றிகள்... கழுதைகள்... காக்காக்கள்