பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

சு.சமுத்திரம் ◯


மீண்டும் உன்னிடம் வரலாம்... உன்னை ஆக்கிரமிக்கலாம்... ஒரு வேளை தனிப் பெரும் எண்ணிக்கையில் வந்தால், மற்ற பறவைகளை விலைக்கு வாங்கலாம்... இந்தக் குயில்கள் தள்ளி வைக்கப்பட்ட மயில்களோடு, உன்னை ஏற்றுக் கொண்டால் ,அடித்துப் பிடித்து பறவை பரிபாலனத்திற்கு ஒரு வேளை வரக் கூடிய அந்த ராசாளி, குயில் அணியை துரத்திவிட்டு, மீண்டும் மரங்கொத்திகளை மரமேற விடாது என்பது என்ன நிச்சயம்?”. இது போய், கருடன் வந்தாலும், அல்லது ஏழு சகோதரிகள் வந்தாலும், அவையும், ராசாளி போலவே நடந்து கொள்ளலாம்”...

அந்த மாமரம் நடுங்கிப் போனது... புதிய உண்மைகள் தெரியத் தெரிய, அது விம்மி, விம்மிக் கேட்டது

“அப்போ ... என் கதி... நான் என்ன ஆவது...?”.

“பயப்படாதே தோழனே... முதலில் உன் நோயாளித் தனத்தை ஒப்புக் கொள்... மருந்து தானாக கிடைக்கும்... உன் இளிச்சவாய் தனத்தை புரிந்து கொள்... பகுத்தறிவு உடனே வரும்... பழமையை திரும்பிப் பார்...ஆனால் அதில் திரும்பி நடக்காதே... புதுமை வந்து பொருந்தும்... இந்த தோப்பை விட உன்னைப் பெரிதாக நினைக்கும் மனோ வியாதியை போக்க, பிற மரங்களோடு ஒப்புறவை நாடு... அசுர பலம், தேவ பலம் அத்தனையும் கிடைக்கும்... எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது நடப்பது பறவைகளின் ஜனநாயகமே அன்றி, நமது ஜனநாயகம் அல்ல என்பதைப் புரிந்து கொள்... பறவைகளிலும் நம் நண்பர்கள் இருக்கிறார்களா... பறவைகள் இல்லாமல் நம் தாவர இனம் பெருகாதுதான்... ஆனால் அந்தப் பறவைகளுக்கு, ஏறிக் கொள்ளும், சுதந்திரம் இருப்பது போல், அவற்றை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற சுதந்திரம் நமக்கில்லை ... நம் மீது