பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


கணக்கெடுத்து நெடுமூச்செறிவது அவள் வழக்கமாகி விட்டது. அவள் இரவு நேரங்களில் தூங்கவா செய்தாள்! எப்படித் தூங்க முடியும்?

கடல் போலப் பெருமூச்சுடன் புரண்டு புரண்டு பொறுமுகிற மகளைப் பார்க்கும் போது அன்னைக்குத் துயரமாகத் தானிருக்கும். ஆனால் என்ன செய்வது? 'அவ அதிஷ்டம், அவகையைப் பிடிக்க எவனும் வரமாட்டேன்கிறானே. ஊம். எதுக்கும் வேளையும் பொழுதும் கூடி வரணும்' என்று வருத்தப்படுவாள்.

தந்தை சங்கரன் பிள்ளை மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்கிற நினைப்பு இல்லாமல் வாழவில்லை. அவரும் அங்கே. இங்கே என்று எவ்வளவோ முயன்று பார்த்தும், சரியான மாப்பிள்ளையாக வந்து வாய்க்கவில்லை. அது போக, 'இவ்வளவு நகை செய்து போடணும். பெண் பேருக்கு என்ன சொத்து எழுதி வைப்பீர்கள்?' என்றெல்லாம் 'கண்டிஷன்' பேசினார்கள் 'பிள்ளையைப் பெற்றவர்கள்.'

'ஏதோ என்னாலானதைச் செய்வேன். என் மகளுக்கு என்ன செய்யனும்கிறது எனக்குத் தெரியாதா! சொத்து, கித்துன்னு பேசுறதுக்கு ஒண்ணுமில்லே. நான் செத்த பிறகுதான் அதெல்லாம் பற்றி யோசிக்கணும். தெரிஞ்சுதா? எங்க வீட்டிலே வச்சு கல்யாணத்தை சிறப்பாகச் செய்து பெண்ணைக் கூட்டி அனுப்புவேன். அதுக்குப் பிறகு என்ன செய்யனும்கிறது நானே தெரிஞ்சு செய்வேன்'.இப்படிக் 'கறாராக'ப் பேசுவார் அவர். அது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?

தாய், நல்ல இடத்துச் சம்பந்தம், பணக்காரனாக, படித்தவனாக, நல்ல உத்தியோகம் பார்க்கிறவனாக இருக்கணும் மாப்பிள்ளை. மாமியார், நாத்தனா ரெல்லோரும் நல்ல மனுஷிகளாக இருக்கணும். அப்புறம் ராதா கண்ணைக் கசக்கிக் கிட்டு நிற்கப்படாது என்று சொல்லி வந்தாள்.

ராதை அழகாக, படித்தவனாக, நல்ல குணத்தோடு, தன்னுடன் சிரித்து மகிழ்ந்து குடும்பம் நடத்துபவனாக மணாளன் வரவேண்டும் என்று பிரார்த்தித்து, குத்து விளக்குக்குப் பூஜை பண்ணி வந்தாள். வெள்ளி, செவ்வாய் விளக்கை பொன் போல் பளபளக்கும்படி துலக்கி, அழகாகக் குங்குமப் பொட்டிட்டு, அரளிப்-