பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


பூவும் பச்சிலையும் கலந்து கட்டிய சரம் சாத்தி, பக்தி பூர்வமாக வணங்கி நின்று பூஜைகள் செய்தாலும் கூட 'விளக்கு நாச்சியார்' அவள் வாழ்வில் ஒளி பிறக்க வகை செய்யவில்லை.

வருஷங்கள்தான் ஓடின.

'எனக்கு ஏது கல்யாணம்! கல்யாணமே ஆகாதுன்னுதான் நினைக்கிறேன்' என்று குமுறினாள் ராதை. தன் மனக்குறையைச் சிலரிடம் கூட அவள் வாய் விட்டுச் சொன்னது உண்டு.

கல்யாணம் என்பது ஒருவகை வியாபாரமாக மதித்து பேரம் பண்ணப்படுகிற இன்றைய மத்திய தர வகுப்புக் குடும்பங்களிலே பிறந்த பெண் மனம் குமைந்து வாழவேண்டி யிருக்கிறது. பெண்ணின் உள்ளமும் உணர்வும் பெற்றவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை பெரும்பாலும்! ராதையின் தந்தையும் தாயும் அதே தன்மையில் தானிருந்தார்கள்.

பருவ மங்கை வீட்டிலே அமைதியற்ற காற்றுப் போல தனிமையில் புழுங்குகிறபோது, இரவின் ஆழத்தில், அடைத்த கதவுக்குப் பின்னால் தந்தை, தாயின் மெல்லிய சிரிப்பும், ரகசியப் பேச்சும் எழும். ராதை விழித்துக் கொண்டு படுக்கையில் கிடப்பாள். அவள் காதில் விழும் ஒலிகள் அவள் கற்பனைக்கு விஷவேகம் கொடுத்து, தேகத்து நரம்புகளில் வெறி ஏற்றும். அவள் புரண்டு புரண்டு தவிப்பாள். பாவம், அனுபவங்கள் எவ்வளவோ பெற்று சுடரொளியாகத் திகழ வேண்டிய தருணி, வாடி வதங்கும் கொடியாகி மனத்தின் அரிப்பிலும், உணர்ச்சிகளின் கொதிப்பிலும் தன்னைக் கறுக்கிக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அவள் பார்வையில் சிவராமன் பட்டான். சிவராமன் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் என்னவோ ஒரு உறவு! அவன் வீடும் அவர்கள் விடும் பக்கத்தில் பக்கத்தில் தானிருந்தன. ஒரே 'காம்பெளன்டு'. இரண்டு வீடுகளையும் தனியாக்கி விடுகிற அந்த வளைவுக்குத் தெரு வாசலும், கதவும் ஒன்றுதான். இரு வீடுகளும் ஒரே மாதிரி அமைப்பில் கட்டப்பட்டவைதான். அடுப்பங்கரை, பட்டாசாலை, திண்ணை முதலிய பிராந்தியங்கள், நடுவிலே வானவெளி, வீட்டு முகப்பிலே உயர்ந்த முற்றம் எல்லாம் இருந்தன. இரண்டு வீடுகளுக்கும் பொதுவாக ஒரு 'பம்பு' தான் இருந்தது.