பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


மூதேவிகள் இருக்குதே கருங்குரங்கு, மாதிரி! ஊம், இருந்தும் இந்தப் பெண்ணுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று அனுதாபம் எழும் அவளைப் பார்க்கும்போது.

ராதை அடிக்கடி அவனைப் பார்த்திருக்கிறாள். வீட்டின் ஜன்னலுக்குப் பின்னால் நின்று கவனித்திருக்கிறாள். வாசற்படியில் நின்று நோக்கியிருக்கிறாள். தண்ணீர் எடுக்கப் பம்புக்குப் போகும்பொழுதும் வரும் போதும் அவனைப் பார்க்கமுடியும். முதலில் அவள் மனம் வேறெவ்விதமான எண்ணத்திற்கும் விதை தெளிக்கவில்லை. ஆனால் காலம் ஓட ஓட, கனவும் நினைவும் அவள் உள்ளத்தில் ஆசைத் தீயைக் கொழுந்து விட்டெழும்படி தூண்டின. அதன் பிறகு அவள் பார்வையில் தனியொளி தெறித்தது. அவள் கறுவிழிகளில் மின்னிய ஒளியில் தனி அர்த்தம் இருந்தது. அவள் இதழ்க் கடையில் அவனுக்காக சதா சிரிப்பு காத்திருந்தது. அவன் பார்வையில் படவேண்டுமென்று, அவனைப் பார்த்து கண்ணிலே கண்ணிட வேண்டுமென்று, அவள் சிரத்தையெடுத்து அங்குமிங்கும் நடைபழக ஆரம்பித்தாள். எழிலாக மிதந்தாள். ஒளியாக நின்றாள். ஒயிலாகச் சிரித்தாள்.

அவளிடம் ஏற்பட்ட மாறுதல்களை அவன் கவனியாமல் இல்லை. அவன் மனம் அறுக்கும். சில சமயம் தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்வான். அதிகமாகப் போனால், எழுந்து வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே போய் விடுவான்.

அவள் உணர்ச்சிக் கிளுகிளுப்பு விசேஷமான செயல் மலர்ச்சிகளுக்குத் துண்டுதலாயிற்று. அவள் வாசல் படியில் நிற்கும் போது, அவள் கை வளைகள் கலகலக்கும். நழுவாத மேலாடையைச் சரி செய்வது போல் மார்பில் கை நீந்தும். பிறகு மேலாடையை இழுத்து விட்டு, மறைந்து கிடந்த அழகை வெளிச்சமிடச் செய்யும். வளையின் கலகலப்பு அவன் விழிகளின் பிறழ்ச்சியை அங்கு இழுக்கும். அவள் சிரித்து விட்டு, வெட்டும் பார்வை சிந்தி, தளுக்காகத் திரும்பி அழகு நடை நடந்து போவாள் வீட்டினுள்ளே. ஜன்னலின் பின்னே கலகல நாதம் பிறக்கும். களிநகை பூத்த முகம் மலரும்.

சில சமயம் தன் இருகைகளையும் உயரத் தூக்கி, சோம்பல் முறிப்பது போல் நீட்டி நெளித்து, அழகின் அற்புதங்களை டாலடிக்கச் செய்வாள் கன்னி. அவள் பாராத கோணங்கள்