பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


அதுகூட ஒன்றரை வருஷங்களுக்கு முன்பு.

இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது 'காலம் என்ன வேகமாக ஓடுகிறது பார்!' என்று வியக்கத் தோன்றும். காலம் சிலசமயம் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கவும் செய்யும் என்பது அவனுக்குத் தெரியும். அதனால்தான் அவன் ராதையைப் பார்த்துவர அவள் வீட்டுக்குப் போகமாட்டேன் என்று சாதித்தான். ஆனால் அவளது பெற்றோர்களே வரமுடியாமல் போனதனால், அவனை அனுப்பி வைத்தார்கள். அவனுக்குப் பழம் நினைவுகள் உதைப்பு கொடுத்தன.

'அநேகமாக அவள் மறந்திருப்பாள். அவள் வாழ்வின் போக்கு அவளைப் புதியவளாக மாற்றியிருக்கும்' என்று தினைத்தான். அவள் மாறவில்லை என்கிற உண்மை புரிந்ததும் அவனுக்குக் குழப்பம்தான் ஏற்பட்டது!

2

ராதை மாறவில்லைதான்!

காலம் அவள் மனப்பண்பிலே மாறுதல் எதுவும் விதைக்கவில்லை.

சூழ்நிலையும், வாழ்வின் மறுமலர்ச்சியும் அவளது பழைய நினைவுகளைத் திரையிட்டு மூடினவே தவிர, ஆழப் புதைத்து மறதிச் சமாதி கட்டி விடவில்லை.

ராதையின் கணவர் வயதானவர்தான். அவளை அன்புடன் நடத்தி வந்தார். என்றாலும் அவள் மீது அர்த்தமற்ற, காரணமற்ற சந்தேகம் வளர்ந்து வந்தது அவர் உள்ளத்தில். அவள்மீது தவறு எதுவுமில்லை. அவருக்குத் தன்னிடமே நம்பிக்கை இல்லாதது தான் காரணம். இளம் பெண்ணை வயதான தன்னுடைய அன்பு திருப்திப் படுத்துமோ, படுத்தாதோ என்கிற ஐயம் அளவுக்கு அதிகமான உபசரிப்புகள் காட்டவும், அர்த்தமற்ற சந்தேகங்கள் கொள்ளவும் இடமளித்தது.

அவளைத் திருப்திப்படுத்த பட்டாடைகளும் நகைகளும் வாங்கித் தருவார். தினந்தோறும் மல்லிகைப் பூ வாங்கிச் சூட்டுவார். அழகாகத் தலை பின்னி பூச்சூடி, வண்ணப் பட்டுடுத்தி,