பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


தனது அலங்காரப் பெருமையை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்கிற பெண்மைப் பண்போடு அவள் வாசலில் நிற்கும்போது, போகிறவர் வருகிறவர்கள் பார்வை அவள் மீது படவும் அவள் முகத்தில் எழும் சிரிப்பைக் காணும்போது அவருக்கு எரிச்சல் கிளம்பும். முதலில் அவரே தூண்டி விட்டுப் பிறகு மெளன ஆதரவு தந்து, பொறுத்துக் கொள்ள முடியாத பக்குவ நிலையை அடைந்தார் அவர். 'என்னத்துக்கு ராதா இந்தத் தேவடியாத்தன மெல்லாம்?' என்று சில சமயம் சீறி விழுவார்.

முதலில் அவருக்கு கெளரவம் கொடுத்த ராதை வரவர அவரது கருத்துக்களை அலட்சியம் செய்யலானாள். அவள் தனது இஷ்டம்போல் அழகு செய்து மினுக்கினாள். பெருமையோடு திரிந்தாள். ஆனால் அவள் கணவனை ஏமாற்ற வில்லை. அவருக்கு வஞ்சகம் நினைக்க வில்லை. நித்ய கன்னியாகவே இருந்துவிட நேரிடுமோ என்றிருந்த அச்சத்தை மாற்றி அவளுக்கு மஞ்சளும் பூவும் மதிப்பும் நிறைந்த புதுவாழ்வும் பெருமையும் வசதிகளும் தந்த கணவனுக்குத் தான் கடமைப்பட்டவள் என்ற நன்றி நினைவு அவளுக்கிருந்தது. நகையிலும், பட்டாடைகளிலும் அழகுசெய்து பெருமைப்பட்டுக் கொள்வதிலும் திருப்தி கண்டு வந்தாள் ராதை.

அவள் நினைவு பூமியிலே தன் வாழ்விலேயே புது அனுபவம் கற்க முடிந்த அமர இரவைப் பற்றிய எண்ணம் மக்கிப் போகவில்லை. அது கிளர்ந்தெழுந்து வேரோடிக் கொடிபரப்பி நன்றாக மலர்ந்து தலையசைத்து மிளிர்ந்தது. அந்த நனவுச் சம்பவத்தின் கனவுகள் என்றும் பசிய நினைவாகி அவளுக்கு மகிழ்வு தந்தன. சிவராமனை எண்ணும்போதே அவளுக்குச் சிரிப்பு வரும். திரும்ப அவரைச் சாவகாசமாகச் சந்தித்துப் பேச முடியவே இல்லையே என்ற வருத்தம் அவளுக்கு இருந்தது. அந்நிலையிலே தான் சந்தர்ப்பம் அவளுக்கு மீண்டும் துணை செய்தது.

சிவராமன் வருவதற்கு முன்னதாகவே, அவளுக்குக் கட்டியம் கூறி வந்து நின்றது அவள் தந்தை எழுதியிருந்த கடிதம், அது வந்ததிலிருந்து இரண்டு தினங்களாக அவள் அவன் வரவை எதிர் நோக்கிக் காத்திருந்தாள். அவர் அதை மறந்தாலும் மறந்திருப்பார் என்று எண்ணிய ராதைக்கு 'இல்லை' என்று அறிவுறுத்தியது அவன் குழப்பம். அவன் குழப்பம் கண்டு அவள் சிரித்தாள்.