பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


கொண்டு தீர்த்த யாத்திரை போகலாம் என எண்ணிய பரமசிவம் விண்தொட முயலும் நீள்முடி இமயத்தை லட்சியமாகக் கொண்டு கம்பி நீட்டிய கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

தன்னுடைய லட்சியம் இப்படித் திடீரென்று மிக உயர்ந்துவிட்ட காரணத்தினால் 'வால்' பரமசிவம் குமாரிகளையும் குட்டிகளையும் பற்றிக் கவலைப்படுவதையே விட்டுவிட்டார். திடீரெனத் தோன்றிமறையும் உண்மையான வால் வெள்ளியின் பண்பே 'வால் நட்சத்திரம்' பத்திரிகைக்கும் வாய்த்தது என்பதை உணர்ந்த குமாரி செல்வாவும் அப்புறம் ஆசிரியரைப் பற்றி கவலைப்படவில்லை.

புகழ்ப்பசி மிகுந்த அவளுக்கு 'சரி. ஏதோ கொஞ்சம் புகழுக்கு வழி கிடைத்தது. கிடைத்தவரை லாபம் தானே!' என்று தோன்றியது. நடந்ததைப் பற்றி எண்ணுவதில்லை அவள். நடப்பதைக் குறித்து மனதை அலட்டிக்கொள்ளும் வழக்கமும் அவளிடமும் கிடையாது. இனி நடக்கப்போவதை நினைத்து ஏங்குவது மில்லை. எதெது எப்படி எப்படி நடக்குமோ அப்படி நடந்துவிட்டுப் போகட்டுமே என்ற அலட்சியம் அவளுக்கு. உணவு, உடை, உற்சாகம், உல்லாசப் பொழுது போக்குகள், இஷ்டம்போல் தின்றுகொண்டிருக்க ஐஸ்க்ரீம்-இவை தட்டுத் தடங்கலின்றிக் கிடைத்துக் கொண்டிருக்கிற வரை அவள் ராணிபோல் வாழ முடியாதா என்ன!

'அவளை ராணிபோல் வாழவைக்க முடியும்; அதற்கு என்னாலானதைச் செய்வேன் என்று சொல்லி முன்வந்தான் ராஜா. அவன் ஒரு செல்லப்பிள்ளை.

செல்வம் அவனிடம் சதிராடிக்கொண்டிருந்தது. கார் இருந்தது. பகட்டும் குணமிருந்தது. பணத்தைத் தண்ணிர்போல் பாவிக்கும் மனமிருந்தது. அவனை நாடி நண்பர்கள் கூடாமல் போவார்களா?

ராஜா காலேஜில் 'கல்யாணப் படிப்பு' படித்தானே தவிர, கல்வி பெறவேண்டும் என்றோ, பெருமைக்குப் பட்டம் பெறவேணும் என்றோ ஆசை கொண்டவனல்ல. பொழுது போகாத வேளையில் பள்ளிக்கூடம் போவதும், பள்ளிக்கூடத்திலே தங்கியிருக்க 'மூடு' இல்லாதபோது ஜாலியாக ஊர் சுற்றுவதுமாக