பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


'சினிமாவிலே நல்ல சான்ஸ் கிடைத்தால்தான் நடிப்பது. அதிலும் அவர்களாகத் தேடி வந்தால்தான் ஒப்புக்கொள்வது என்று எண்ணம். பாருங்க மிஸ்டர் ராஜ், நாமாகப் போனால் படாதிபதிகள் நம்மை மலிவாக மதித்து விடுகிறார்கள். மேடைமீது தோன்றி திறமையினாலும், விளம்பரங்கள் பத்திரிகைப் பப்ளிவிட்டி முதலியவைகளினாலும் கவனத்தைக் கவர்ந்த பிறகு அவர்களாகத் தேடிவந்தால் நமது மதிப்பு உயர்ந்துவிடுகிறது.'

'மதிப்பை நிர்ணயிக்கத் தெரியாத மடையர்கள்! அவர்கள் கெட்டார்கள்!' என்று அழுத்தமாக அறிவித்தான் அவன்.

'அவர்கள் தயவு நமக்கு வேண்டியிருக்கிறதே! நமது திறமை எங்கும் பரவவும், நமது புகழை அதிகமாக்கவும்...'

'கவலைப்படாதே செல்வா! நாமே ஒரு படக் கம்பெனி ஆரம்பித்து விடலாம். முதலில் ஒரு நாட்டிய சிங்காரியின் கதையைப் படம் பிடிப்போம். அதில் உங்கள் திறமையையும் அழகையும் எவ்வளவு தூரம் சோபிக்கச் செய்யலாமோ அவ்வளவுகுப் பிரமாதப்படுத்தி விடலாம்' என்றான்.

வியப்பால் விரிந்தன அவள் கண்கள். மகிழ்வு பூத்தது அவள் முகத்தில். உள்ளத்திலே உற்சாகம் குமிழிட்டுக் கொப்புளித்தது. ஆனந்தமாகவே மாறிவிட்டாள் குமாரி, சிட்டுக்குருவி போல் தத்திக் குதித்தாள். மணிப்புறாபோல் துள்ளி வட்டமிட்டுக் குதுகலத்தினால் கூவினாள். 'அஹஹா ஹொஹ்ஹோ!' என்று கலகலத்தாள். 'ராஜா என் ராஜா!' என்று பாடி ஆடி அமர்க்களப்படுத்தி அவன் அருகில்வந்து கன்னத்தில் அன்பாக வருடினாள் வளைகள் கலகலத்த மணிக் கரத்தினாலே.

ராஜா இந்த உலகத்திலிருப்பதாகவே நம்பவில்லை. விண்ணிலே பறப்பது போல, ஆனந்தச் சிறகுகள் பெற்று அற்புதலோகம் எங்கோ சுழன்று நிற்பதாகத் தோன்றியது அவனுக்கு எதிரே அழகின் உயிர்ப்பாய் ஆடிய குமாரி கவிதையின் சிரிப்புபோல் காட்சிதந்தாள். இளமையின் பூர்ணமான அவள் கலையின் அலை நுரையாய், மலர்க்கூட்டத்தின் ஒளிக்கொடியாய், அற்புதமாய் இசையாய் நயமாய் வாழ்வாய், வாழ்வின் சிறப்பாகஎப்படி எப்படி யெல்லாமாகவோ தோன்றினாள். 'இந்த இன்பம் நிலைத்திருப்பதற்காக, இவளுக்காக என்ன வேண்டுமானாலும் ஒரு 4