பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பாத்திரம்தான் பளிர் என்று வெயில் பட்டு மின்னியது. பொன்னொளித் தெறிப்பு. பிள்ளை ஒரு கல்லை எடுத்து குரங்கின்மீது வீசினார். மறுபடியும் இன்னொரு கல்லை விட்டெறிந்தார். கையிலிருந்த சொம்பில் சுவையானது எதுவும் இல்லை என்று புரிந்து கொண்டதாலும்-பதிலுக்கு எதையாவது விட்டெறிய வேண்டும் என்ற உணர்வாலும்-குரங்கு அந்தப் பாத்திரத்தையே வீசியடித்தது. - பாத்திரம் கீழே விழுந்ததும், பிள்ளை வேகமாக அதை எடுத்தார். பேரானந்தம் கொண்டார். பொன்முலாம் பூசப்பெற்ற பித்தளைச் 'செம்பு' அது. அதன் மேல் தெய்வ உருவம் வரையப்பட்டிருந்தது. லட்சுமியும் நாரானயனும், சுற்றிலும் பூக்களும் கொடிகளும் காணப்பட்டன. பூசைச் செம்பு என்றது பிள்ளையின் மனம். யாரோ வைத்து பூசை பண்ணுவது. எவரோ சாமியார் பூசை செய்ததாக இருக்கலாம். ஆற்றோர மடத்தில், அல்லது சத்திரத்துத் திண்ணையில், அல்லது தோப்பில் படுத்து அவர் தன்னைமறந்து தூங்கிக் கொண்டிருக்கையில், குரங்கு இதை எடுத்து வந்திருக்க வேண்டும். இப்போது எனக்குக் கிடைத்திருக்கிறது என்று அவர் நினைத்தார். 'லட்சுமி நாராயணர், இதை வைத்துப் பூசை பண்ண வேண்டும். நல்ல காலம் பிறக்கும்’ என்ற நம்பினார். ஆற்றில் அந்தச் செம்பை முக்கி எடுத்து, தனக்குத் தெரிந்த பக்திப் பாடல்களை முணுமுணுத்தவாறே வீடு திரும்பினார். அன்று முதல் அந்தச் செம்பு பிறவிப்பெருமாள் பிள்ளை வீட்டில் 'சாமி' ஆகிவிட்டது. நித்திய பூஜைகளை ஏற்றது. விசேஷ தினங்களில் தடபுடலான கவனிப்பையும் பெற்றது. அப்போதுதான் பிள்ளை பெரிய வீட்டைக் கட்டிக் குடியேறியிருந்தார். வீட்டைக்கட்டிப் புதுமனை புகுந்த வேளையும், லட்சுமி நாராயணர் செம்பு கிடைத்த அதிர்ஷ்டமும் அவருக்குப் புதிய தெம்பும் ஊரில் தனி மதிப்பும் கிடைக்க வழி செய்தன. பிறவிப்பெருமாள் பிள்ளை 'செயலான குடும்பத்தைச்