பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் சேர்ந்தவர். அவர் தந்தை அவருக்கும் அவருடைய அண்ணன் தம்பிகளுக்கும் போதுமான அளவு சொத்து சேர்த்து வைத்திருந்தார். குடியிருப்பதற்குச் சொந்த வீடு என்று அவர் எதுவும் விட்டுப் போகவில்லை. இது பிறவிப்பெருமாள் பிள்ளைக்குப் பெரிய குறையாக உறுத்திக் கொண்டிருந்தது. சொந்தமாக ஒரு வீடு கட்ட வேணும் என்ற ஆசை அவரைப் பிடித்து ஆட்டியது. எங்கே போனாலும், எந்த வீட்டைப் பார்த்தாலும், இதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்; இதைவிடப் பெரியதாகக் கட்ட எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணிப்பதில் அவர் ஈடுபட்டுவிடுவார். விரைவிலேயே அவர் சொந்த வீடு கட்டி, 'கிரகப்பிரவேசத்தை'யும் பெரிய அளவில் செய்து முடித்தார். மகிழ்வண்ணபுரத்தில் 'பிள்ளைமார் வீடுகள்' அந்நாட்களில் எண்பது இருந்ததாகச் சொல் வார்கள். 'எல்லோரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு; கொள்வினை கொடுப்பினை எல்லாம் கூடியவரை சொந்தத்துக்குள்ளேயே, உள்ளுருக்குள்ளேயே முடித்துக் கொண்டதால், அனைவரும் (சொந்தக்காரர்கள்) ஆகவே இருந்தார்கள். அவர்களுக்குள்ளேயே உறவும் பகையும் பாராட்டி வாழ்க்கையை சாரமுள்ளதாகவும், சாரமற்றதாகவும்அவரவர் இயல்புகளின்படி-ஆக்கிக் கொண்டிருந்தார்கள். பள்ளிப் படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்காத அந்த நாட்களிலேகூட பிறவிப்பெருமாள் பிள்ளை அண்ணாவியின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 'அரியோம் நம'வில் ஆரம்பித்து, மேலே அஞ்சாறு வருடங்கள் கல்விகற்ற பெருமையை அடைந்திருந்தார். அறிவுக் கூர்மையிலும் செயல் துணிவிலும் ஊரார் மதிக்கும் அந்தஸ்தை அவர் பெற்றிருந்தார். ஊர் விவகாரங்களைத் தீர்த்து வைக்கும் பெரிய மனிதராகவும் அவர் விளங்கினார். இந்த விஷயத்தில் அவர் தருமராசா என்றும் பெயர் பெற்றிருந்தார். 'நல்லவர்களுக்கு நீதி தவறாத 'தர்மராசா' பொல்லாதவர்களுக்கு எமராசா என்ற அக்கம்பக்கத்து ஊர்களிலும் அவர் பெருமை பரவியிருந்தது. மகிழ்வண்ணபுரத்தில் நீதியின் பிறப்பிடமாகத் திகழ்ந்தது அந்த வீடு-பிறவிப்பெருமாள் பிள்ளை காலத்திலே,