பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பிடித்துக் கொண்டு மிடுக்காகக் கிளம்பினார். எதுவும் பேசாமல் தேவமார் குடியிருப்பை நோக்கி விறுவிறு என்று நடந்தார் அவர் அவரோடு இரண்டு மூன்று பிள்ளைமார்களும் போனார்கள். என்ன செய்யப் போகிறாரோ, எது நடக்குமோ என்ற பதைப்பு அவர்களுக்கு. தேவமார்களும், இடுப்பில் கட்டிய துண்டும் மார்பில் மடித்துக் கட்டிய கைகளுமாய், அவர்கள் பின்னாலேயே, தடந்தார்கள். - தேவமார் குடிசைகள் நிறைந்த பகுதியை அடைந்ததும், "டின்னை கீழே இறக்கு" என்று பிள்ளை கூறினார். இதற்குள் ஒரு கூட்டம் அங்கே கூடிவிட்டது. "வைக்கப்படப்பிலே தீ வச்சவனை நீங்க காட்டிக் கொடுக்க மாட்டீங்க. இல்லே? உம். இப்போ இங்க உள்ள குடிசைகள் பூரா பத்தி எரியப்போவுது. அப்புறம் நடக்கிறபடி நடக்கட்டும்...ஏய், கூரைகள் மேலே எல்லாம் மண்எண்ணையை தெளி" என்று பிறவிப் பெருமாள் உத்திரவிட்டார். "குடிசைக்குள்ளே பொம்பிளைகள், புள்ளை குட்டிகள் இருந்தா, எல்லோரும் வெளியே வரட்டும். அப்புறம் அழுது அடிச்சா பிரயோசனப்படாது" என்றார். ஊர் பூராவும் அங்கே குழுமத் தொடங்கியது. "சொக்கப்பனை பார்க்கப் போறிங்க. ராத்திரி ஊருக்குள்ளே வைக்கப்படப்பு பத்தி எரிஞ்சுது. இப்போ, பட்டப்பகலிலே இங்கே குடிசைகள் எரியப் போகுது" என்று கூறி, அவர் தீக்குச்சியைக் கிழித்தார். எரியும் குச்சியைத் தூக்கிப் பிடித்தார். அருகிலிருந்த கூரை மீது விசி எரிவதற்காகச் சுழற்றினார். ‘சாமி சாமி. எங்களைக் காப்பாத்துங்க" என்று பொம்பிளைகள் ஓலமிட்டார்கள் கும்பலிடையே சலசலப்பு ஏற்பட்டது. ஜனக்கடல் விலகிக் கொடுப்பதுபோல் பிரிந்து இடம் விட்டது. . இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஒருவனை துண்டினால் பிணைத்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். பிள்ளை முன் நிறுத்தினார்கள். பிறவிப் பெருமாள் ரசித்துச் சிரித்தார்.