பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. பிறவிப்பெருமாள் பிள்ளையும் மகளை கண்டித்து, நல்உபதேசம் அருளினார். அடுத்த தடவை சூடி பிறந்த வீட்டுக்கு வரவில்லை. அதற்குப் பதில் ஒரு செய்தி வந்தது. அனைவருக்கும் அதிர்ச்சி தந்தது. சூடி ஓடிப்போய்விட்டாள் ! அவளுடைய மாமா மகன் சுந்தர மூர்த்தியோடு. எங்கே போனாள் என்று யாருக்கும் தெரியாது. பிள்ளை பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினார். தேடிப் பார்த்தும் பலன் இல்லை. சூடி போனவள் போனவள்தான்! பிறகு மெது மெதுவாக உண்மைகள் வெளிப்பட்டன. சூடிக்கும் சுந்தரமூர்த்திக்கும் ரொம்ப காலமாகவே நேசம் வளர்ந்து கொண்டிருந்தது. மாமன் மகன் என்ற முறையில் அந்த வீட்டில் அவனுக்கு வரவேற்பும் கவனிப்பும் இருந்தது. பிறவிப் பெருமாள் பிள்ளை அவனை வீட்டில் ஒருவனாகக் கருதினாரே தவிர, அவன் மீது விசேஷ கவனம் செலுத்தவில்லை. அத்தை மகள் என்ற முறையில் அவளும், மாமன் மகன் எனும் உரிமையோடு அவனும் எப்போதும் சிரிப்பும் பரிகாசமும், கேலியும் கூத்தடிப்புமாகப் பொழுது போக்கி நாளோட்டினார்கள். 'சின்னஞ் சிறுசுகள்' என்று அவர்களுடைய கும்மாளங்களை மற்றவர்கள் கண்டு களித்து ரசித்தார்களே தவிர களங்கம் கற்பித்தாரில்லை. கல்யாணப் பேச்சு வந்தவுடன் சூடி அம்மாவிடம் "எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம்" என்றாள். "எனக்கு அத்தான் மீது ஆசை" என்றாள். "அத்தானை கல்யாணம் செய்து கொண்டால் நல்லாயிருக்கும்" என்றாள். அவள் தன் மனசை இப்படித் திறந்து காட்டிய போதெல்லாம், அம்மா கண்டித்தாள். ‘பைத்தியம் மாதிரி உளறாதே. உன் நன்மைக்காகத்தான் அப்பா இப்படிச் செய்றாங்க' என்று கூறி மகளின் வாயை மூடி வந்தாள். அதன் பிறகு மகள் தன் மனசுக்குத் திரையிட்டு, அதற்குள் தனது ஆசைப் பயிரை வளர்த்து வந்திருக்கிறாள். சந்தர்ப்பம் வந்ததும், செயலில் துணிந்து காட்டி விட்டாள். "சவம் எக்கேடும் கெட்டு, எப்படியும் நாசமாகட்டும். அந்தப் பயலை நம்பி வீட்டை விட்டு வெளியேறியவள் நாளைக்கு தெருவிலே நின்னு சீரழியத்தான் போறாள்" என்று சாபம் கொடுப்பது போல் சூடாகப் பேசிய பிறவிப்பெருமாள் அப்புறம் சூடிக்கொடுத்த நாச்சியாரின் பேச்சையே எடுக்கவில்லை.