பக்கம்:ஒரே இரத்தம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவர் கைகளும் இணைகின்றன. செங்கமலம், மகேஸ்வர னின் கரத்தைத் தன் கண்களில் ஒத்திக்கொள்கிறாள். அவன் கரம் அவளது கண்ணீரால் நனைகிறது. சமாதியை விட்டு இரு வரும் நகருகிறார்கள். திருக்கைவால் முனியாண்டி மறைந்திருக் கும் அந்த மரத்தின் பக்கம் வருகிறார்கள். தடித்து உயர்ந்து பரந்து கிடக்கும் அதன் வேர் ஒன்றில் இருவரும் உட்காருகிறார்கள். சிறிது நேரம் அமைதி. மகேஸ்வரன், செங்கமலத்தின் கன்னத்தில் மெதுவாக முத்தமிடுகிறான். “ஊஹூம்!... நான் வர்ரேன்” என்று அவள் பரபரப்புடன் எழுகிறாள். “சரி! சரி! பயப்படாதே! நான் ஒண்ணும் எல்லை மீறிவிட மாட்டேன்! செங்கமலம், நான் முதலில் போய்விடுகிறேன் வேறு பாதையில்! நீ கொஞ்சம் தாமதித்துப் போ! மகேஸ்வரன், செங்கமலத்திடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான். அவன் சென்ற திக்கையே செங்கமலம் பார்த்துக் கொண்டு நின்றாள். அங்குள்ள புதர்களடர்ந்த பகுதியில் அவன் தலை மறைந்துவிட்டது. இன்ப உணர்வு கிறுகிறுக்கச் செங்கமலம் வீட்டுக்குச் செல்லத் திரும்பினாள். திருக்கைவால் முனியாண்டி, அவளைத் தன் முரட்டுக் கரங்களால் அணைத்துக்கொண்டு, அந்த இடத்தை விட்டு வேறிடத்துக்கு இழுக்கத் தொடங்கினான். செங்கமலம் அலறியது அந்த மயானத்தின் அமைதியைக் குலைத்துக்கொண்டு கிளம்பியது. அந்தக் கூச்சல் மகேஸ்வரன் காதிலும் விழுந்தது. செங்கமலத்தின் குரல்தான்! அதை அவன் புரிந்துகொள்ளக் கஷ்டமேற்படவில்லை. ஓடிவந்தான். முனியாண்டியின் கைகளில் பலங்கொண்ட மட்டும் அடித்தான். முனியாண்டி, செங்கமலத்தை விட்டுவிட்டு மகேஸ்வரன் மீது திருக்கைவாலை வீசினான். இருவரும் அந்த இடுகாட்டுக்கருகில் கடும் போரிட்டுக் கட்டிப் புரண்டனர். மகேஸ்வரனின் தாக்குதலை முனியாண்டியால் நீண்ட நேரம் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உயிர் தப்பிட ஓடிவிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரிய வில்லை. அடி பொறுக்கமாட்டாமல், திருக்கைவால் தலைதெறிக்க ஓடினான். அவன் ஓடுவதைப் பார்த்துச் செங்கமலம் வாய்விட்டுச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு நீடிக்கவில்லை. அடுத்து, முனியாண்டி யால் என்ன ஆபத்துக்கள் ஏற்படுமோ என்று அஞ்சினாள். மகேஸ் வரன், அவளை நெருங்கினான். அவள் அவனது தோளில் முகம் புதைத்து இறுகத் தழுவிக் கொண்டாள். இருவரும் மெய்மறந்து நின்றனர். அக்காளைத் தேடிக்கொண்டு வந்த நந்தகுமார், இடுகாட்டுக்கு அருகே இந்தக் காட்சியைக் கண்டு அசையாமல் நின்றான். அவன் கண்கள் மட்டும் அவனையறியாமல் மூடிக்கொண்டன. 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/91&oldid=1702497" இலிருந்து மீள்விக்கப்பட்டது