பக்கம்:ஒரே உரிமை.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

கருவேப்பிலைக்காரி

கத்துடன் தான் பதில் சொல்லுகிறார். ஆனால் மறைமுகமாக, "என்னுடைய செலவுக்கு மேற்கொண்டு ஐந்து ரூபாய் தேவையாயிருக்கிறது: உனக்குத் தெரிந்தால் எரிந்து விழுவாயே என்று தெரியாமலே எடுத்துக்கொண்டு விடுகிறேன்!" என்று இத்தனை நாளும் அவர் என்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்!

அப்படித்தான் எடுத்துக் கொள்கிறாரே, அதையாவது தன் சொந்த உபயோகத்துக்காகச் செலவழித்துக் கொள்கிறாரோ என்று எண்ணிப் பார்த்தால் 'இல்லை' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அடிக்கடி எனக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து என்னைத் திருப்திப்படுத்த முயலுகிறாரே, அதற்கு வேண்டிய காசு அவருக்கு எங்கிருந்து வரும்? இப்படி ஏதாவது எடுத்துக் கொண்டால்தானே உண்டு? ஒரு நாளாவது இதைப் பற்றி நான் யோசித்துப் பார்த்தேனா!

அப்பாவி மனுஷர், பாவம்! உண்மை தெரியாமல், "சாயந்திரம் வரட்டும், அவரை என்ன பாடு படுத்தி வைக்கிறேன். பார்!" என்று அம்புஜத்திடம் சொன்னோமே, இது நியாயமா?

இப்படி யெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த எனக்குப் பொழுது போனதே தெரியவில்லை. அவர் வரும் காலடிச் சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன்.

ஏனோ தெரியவில்லை; அவரைக் கண்டதும் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக நான் 'களுக்' கென்று சிரித்து விட்டேன்.

"ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டே, அவர் ஒன்றும் புரியாமல் தம்முடைய முகத்தை ஓடோடியும் சென்று கண்ணாடியில் பார்த்துக் கொண்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/102&oldid=1149880" இலிருந்து மீள்விக்கப்பட்டது