பக்கம்:ஒரே உரிமை.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

யாருக்குப் பிரதிநிதி?


"அதற்கு என்னை என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்? ஊரிலே எந்த எழவு நடந்தாலும் அதற்கு இந்த அன்ன விசாரம்தானா பொறுப்பாளி?—போங்கடா, வேலையைப் பார்த்துக்கொண்டு!" என்று எரிந்து விழுந்தார் 'ஐயா.'

"அப்படிச் சொல்லிப்பிட்டா எப்படி, சாமி? கோடி வீட்டு ஐயா சொன்னாரு—உங்கக்கிட்ட சொன்னா மேலிடத்திலே சொல்லி எங்களுக்காக ஏதாச்சும் செய்விங்கன்னு!"

"அவனுக்கும் வேலை கிடையாது; உங்களுக்கும் வேலை கிடையாது. நானும் உங்களைப் போலவா இருக்கிறேன்? எனக்கு எவ்வளவோ வேலை இருக்கிறது. நீங்கள் போய்த் தொலையுங்கள்!"

"வேலையோடு வேலையா இந்த ஏழைகளையும் கொஞ்சம் கவனிச்சிக்கிட்டா நீங்க நல்லா யிருப்பீங்க, சாமி!"

"இல்லாவிட்டால் கெட்டு விடுவேனுக்கும்!—அட சனியன்களே! நீங்கள் மட்டுந்தானா ஏழைகள்? நாங்களுந்தான் ஏழைகள்!—முதலில் நீங்கள் இங்கிருந்து நடையைக் கட்டுங்கள்; அப்புறம் நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன்!" என்று சொல்லிவிட்டுக் கதவைப் 'படா'ரென்று சாத்திக் கொண்டு 'ஐயா' உள்ளே சென்று விட்டார்.

***

ஸ்ரீமான் அன்னவிசாரம் எம். எல். ஏ. ஒரு காலத்தில் வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அவர் தம்முடைய மனைவியை மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வேறு வழியின்றி நகரிலிருந்த சேவாசிரமத்தில் சேர்ந்தார். அந்த ஆசிரமத்தில் அவருக்கு மாதா மாதம் ரூபாய் ஐம்பது சம்பளம் கிடைத்து வந்தது. அதை அவர் வெளியே சொல்லிக் கொள்வதில்லை. அப்படிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/106&oldid=1149379" இலிருந்து மீள்விக்கப்பட்டது