பக்கம்:ஒரே உரிமை.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

காரியவாதி

நியாயந்தானே? வயிற்றுக் கவலை இன்னதென்று அறியாதவர்களே பாவ புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்படாம விருக்கும் பொழுது, பொன்னியைப் போன்றவர்கள் கவலைப்பட முடியுமா?

நோயின் வேகம் எவ்வளவுதான் அதிகரித்த போதிலும் 'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை' என்னும் பழமொழியில் தான் வைத்திருந்த நம்பிக்கையைக் கடைசி வரையில் இழக்காமலே இருந்தான் விருத்தாசலம். அவனுடைய நிலையில், அவற்றைத் தவிர வேறு எதில்தான் அவன் நம்பிக்கை. வைக்க முடியும்? கடைசியில் சுக்கும் அவனைக் காப்பாற்றவில்லை; சுப்ரமணியக் கடவுளும் காப்பாற்றவில்லை. நினைத்த போது எதிரே வந்து நின்றதற்காக எத்தனையோ பெரியோர்கள், "அப்பா! உனக்கு ஆயுசு நூறு!" என்று விருத்தாசலத்தை வாழ்த்தியிருந்தார்களே, அவர்களுடைய வாக்கும் ஓரளவாவது பலிக்கவில்லை, முப்பதாவது வயதிலேயே அவனுடைய மூச்சு நின்றுவிட்டது.

பொன்னி புலம்பினாள்; ஓய்ந்தாள்.

***

பிறந்தகத்தில் பொன்னிக்கு அண்ணா ஒருவனும் அவனுடைய மனைவி மக்களும் இருந்தனர். சொத்து சுமாராக இருக்கத்தான் இருந்தது. பெற்றோர்கள் சம்பாதித்ததுதான். இருந்தும் என்னத்தைச் செய்ய?—பொன்னிதான் பெண்ணாச்சே! அவள் ஆணாய்ப் பிறந்திருந்தாலும், "அடேய்! எனக்கும் பாகம் பிரித்துக் கொடு!" என்று மல்லுக்கு நின்றிருக்கலாம். பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு அந்த உரிமை ஏது?

விருத்தாசலம் அவளுக்காக வைத்து விட்டுச் சென்ற சொத்துக்களோ மூன்று வகையானவை; ஒன்று, கூலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/114&oldid=1149881" இலிருந்து மீள்விக்கப்பட்டது