பக்கம்:ஒரே உரிமை.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காரியவாதி

113

வேலை; இரண்டாவது, ஒரு கைக் குழந்தை; மூன்றாவது, ஓர் எருமை மாடு!

கூலி வேலை கிடைத்தால் உண்டு; குழந்தை குடிக்கப் பாலின்றி வளர்ந்தால் உண்டு; எருமை...?

ஆமாம்; ஆண்டவனைவிட அந்த எருமைதான் இப்போது அவளுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாயிருந்தது. அந்த ஆறுதலும் நெடுநாள் நீடிக்கவில்லை. ஆறு மாதங்களுக்கெல்லாம் அந்த எருமை கருவுற்று விட்டது.

அப்புறம் என்ன? இருக்கும்போது பொன்னியின் வீட்டு அடுப்பு எரிந்தது; இல்லாதபோது அணைந்து கிடந்தது.

அருகில் இருந்தவர்களில் ஒருத்தி ஒரு நாள் பொன்னியை நோக்கி, "ஏன் பொன்னி! இப்படியே இருந்தா எப்படி? அந்த எருமையை யாருக்காச்சும் வித்துப்பிட்டுப் பணத்தை எடுத்துக்கிட்டுப் பேசாம உங்க அண்ணாச்சி வீட்டுக்காச்சும் போய்ச் சேருவதுதானே?" என்று கேட்டாள்.

"நல்லாச் சொன்னே! 'உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா' ஆவதற்கா? அந்தப் பணம் இருக்கிறவரைக்கும் அவன், 'இங்கே வா, தங்கச்சி! அங்கே வா, தங்கச்சி'ன்னு சொல்லிக்கிட்டு இருப்பான். அப்புறம் 'அவன் யாரோ, நான் யாரோ' தானே?"

"என்னடி, அப்படிச் சொல்றே? அந்த வீட்டிலே உனக்கில்லாத அதிகாரம் வேறே யாருக்கு இருக்குங்கிறேன்!"

"ஆமாம், கள்ளங்கபடு இல்லாத அந்தக் காலத்திலேயே அண்ணாச்சி வீட்டுக்குப் போன நல்லதங்காளின் கதி என்ன ஆச்சு?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/115&oldid=1149882" இலிருந்து மீள்விக்கப்பட்டது