பக்கம்:ஒரே உரிமை.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்ன பாவம் செய்தேன்?

131



ன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் முடிந்து, இரண்டாம் அத்தியாயம் ஆரம்பமாயிற்று. அதாவது நேற்று வரை என் தந்தைக்குப் பாரமாயிருந்த நான், இன்று, என் கணவருக்குப் பாரமானேன்.

ஆரம்பத்தில் என் கணவர் என்னிடம் காட்டிய அன்பு, சின்னஞ் சிறு வயதில் என் தகப்பனார் காட்டிய அன்பைக் கூடத் தூக்கியடிப்பதாயிருந்தது. அதைக் கண்டு நான் அடைந்த பெருமைக்கு ஓர் எல்லையே இல்லை. வெறும் புத்தக அனுபவத்தோடு இருந்த எனக்கு அந்த அன்பு, அமரத்துவம் வாய்ந்ததென்றே முதலில் தோன்றிற்று, உண்மையில் அவர் என் மீது காதல் கொள்ளவில்லை, என் 'கன்னிப் பருவ'த்தின் மீதுதான் காதல் கொண்டார் என்ற விஷயம் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.

அந்த நாளில் அவரைக் கண்ட மாத்திரத்தில் என்னை வெட்கம் பிடுங்கித் தின்னும். எதிரே நிற்பதென்றால் என்னவோ மாதிரி இருக்கும்! தப்பித்தவறி அவரிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டாலோ என் உடம்பே சில்லிட்டுப் போகும்.

அவரோ என்னை நேருக்கு நேராக ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டு மென்றும், ஒரு வார்த்தையாவது பேசிவிடவேண்டுமென்றும் துடியாய்த் துடிப்பார். ஆடு திருடிய கள்ளனைப் போல் அக்கம் பக்கம் பார்த்து விழித்த வண்ணம், "ராஜினி, ராஜினி!" என்று மெல்லிய குரலில் அழைத்துக் கொண்டே, என்னைச் சுற்றிச் சுற்றி வருவார். அவரைக் கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டே நான் காரியமும் கையுமாக இருப்பேன். ஒரு காரியமும் இல்லாத போதுகூட யாரையாவது கூப்பிட்டு வைத்துக்கொண்டு சாங்கோபாங்கமாகப் பேசிக் கொண்டிருப்பேன்—ஆமாம், அவர் என்னை நெருங்குவதில் எவ்வளவுக்கெவ்வளவு ஏமாற்ற மடைகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு அப்போது எனக்கு ஆனந்தமாய்த் தானிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/133&oldid=1149438" இலிருந்து மீள்விக்கப்பட்டது