பக்கம்:ஒரே உரிமை.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரே உரிமை

17

“இல்லாம என்னங்க? அதோ, அந்த முதலியாரு ரொட்டிக் கடை இருக்குதுங்களே, அதிலே தினம் தினம் எம்மா வியாபாரம் ஆவுது!”

“பின்னே என்ன? உன்னுடைய கடையிலே மட்டும் ஏன் வியாபாரம் ஆகவில்லை?”

“என்ன இருந்தாலும் நான் பறையன் பறையன் தானுங்களே? என் கடையிலே யாராச்சும் ரொட்டி, வாங்கணும்னா அவங்களும் பறையர்களாத்தானே இருக்கணும்? அவங்களுக்குத்தான் கூழுக்கே பஞ்சமாச்சுதுங்களே, அவங்க எங்கே ரொட்டி, கிட்டி வாங்கப் போருங்க? வந்தா ஒசந்த சாதிக்காரருதான் வரணும். அவங்க எங்கிட்ட எங்கேயாச்சும் வருவாங்களா?—ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லணுங்க; அந்த மட்டும் அவங்க என் கடைக்கு வராம இருந்ததோடு நின்னாங்களே! ‘பறப் பயலுக்கு இங்கே என்னடா ரொட்டிக் கடை?’ ன்னு என்னையும் அடியா அடிச்சுப் போட்டு, இந்தக் கடையையும் காலி பண்ணாம இருந்தாங்களே, அதைச் சொல்லுங்க!”

“என்னடா, திருப்பித் திருப்பிப் பறையன், பறையன் என்கிறாயே?” என்று நான் அலுத்துக் கொண்டேன்.

“நானாங்க சொல்றேன்? ஊர் சொல்லுது, உலகம் சொல்லுதுங்க! இந்தப் பதினஞ்சு நாளா என் கடையை யாரும் எட்டிப் பார்க்காமலிருப்பதிலிருந்தே இது தெரியலங்களா?”

“சரி, அப்படியென்றால் நீ இப்பொழுது என்னதான் சொல்கிறாய்?”

“இது உங்க கடை; இதிலே போட்டிருக்கிற பணம் உங்க பணம். நீங்களே இந்தக் கடையை எடுத்துக்குங்கோன்னு சொல்றேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/19&oldid=1148925" இலிருந்து மீள்விக்கப்பட்டது