பக்கம்:ஒரே உரிமை.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மாட்டுத் தொழுவம்

ஒரு நாள் அகிலா, என்னிடம் கோடி வீட்டுக் குமுதத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது பேச்சு வாக்கில், “அவளுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைத்தது. வீட்டில் அவளும் அவளுடைய அகத்துக்காரரும்தானாம். மாமியார் நாத்தனார் என்று ஒரு தொத்தரவும் கிடையாதாம்!” என்றாள் அவள்.

நான் சும்மா இருந்திருக்கக் கூடாதா? “என்னமோ, அவள் பாக்கியசாலி!” என்று சொல்லி வைத்தேன்.

அவ்வளவுதான்; உடனே என் மாமியார், “நீ பாக்கியசாலியில்லையாக்கும்? ஏன்னா, நான் ஒருத்தி இன்னும் உயிரோடு இருக்கேனோ இல்லையோ, அது உன் கண்ணே உறுத்துகிறதாக்கும்!” என்று ஆரம்பித்து விட்டாள்.

நான் என்னத்தைச் சொல்வது? “அதைத்தான் நாம் ஏன் சொன்னோம்?” என்று எண்ணி வருந்தினேன்.

அன்று மாலை அவர் வேலையிலிருந்து வந்ததும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது என் மாமியாருக்கு உண்மையாகவே கண்ணீர் வந்ததோ இல்லையோ, அவள் தன் மேலாக்கினால் கண்களைத் துடைத்துக் கொண்டே, “உன்னைப் பெற்று வளர்த்ததற்கு இத்தனை நாளும் நான் அடைந்த சுகம் போதும்டா அப்பா, போதும்! இனிமேல் ஒரு விநாடிகூட நான் இந்த வீட்டில் இருக்கவே மாட்டேன்!” என்று வழக்கமாக ஆரம்பிக்கும் பீடிகையுடன் ஆரம்பித்து, “எதிர் வீட்டில் அகிலா என்று ஒருத்தி இருக்கிறாளோ இல்லையோ, அவளை யாரும் கேட்பார், மேய்ப்பார் கிடையாது. தினசரி இங்கே வந்து இவளுடன் ஏதாவது அரட்டையடித்து விட்டுப் போவாள். இன்று மத்தியானமும் வந்திருந்தாள். அவளிடம் இவள் என்னவெல்லாம் சொல்கிறாள், தெரியுமா? என்னைத் தொலைத்துத் தலை முழுகுவதற்கு இவள் பாக்கியம் செய்யவில்லையாம். நான் ஒருத்தி இன்னும் உயிரோடிருப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/42&oldid=1148949" இலிருந்து மீள்விக்கப்பட்டது