பக்கம்:ஒரே உரிமை.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாட்டுத் தொழுவம்

43

வேண்டுமா? என்னால் வீட்டுக் காரியங்களைச் செய்ய முடிய வில்லை. அசதி அதிகமாயிருந்தது. சாப்பாடும் சரிவர ஏற்றுக் கொள்ளவில்லை. வேலை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. வசவுகளுக்கோ ஓர் அளவில்லை. வீட்டிலோ அடிக்கும் கையைத் தவிர, அணைக்கும் கை இல்லை.

ஒரு நாள் இரவு பாருங்கள் – வழக்கம்போல் எல்லோரும் சாப்பிட்டான பிறகு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது மாடு ‘அம்மா, அம்மா!’ என்று ஓயாமல் கத்திக் கொண்டிருந்தது. வெளியே உட்கார்ந்திருந்த அவர், கொஞ்சம் வைக்கோலை எடுத்துக் கொண்டு போனார். அன்று எனக்குப் பதிலாக அவர் அந்த வேலையைச் செய்து விட்டது, அவருடைய தாயாருக்குப் பொறுக்கவில்லை. “ஏண்டா, அப்பா! நீதான் காலையில் போய் சாயங்காலம் வரை அங்கே உழைத்துவிட்டு வருகிறாயே, வீட்டில் இருக்கும் அவளுக்கு என்ன கேடு? மாடுதான் அத்தனை நாழியாக் கத்துகிறதே, கொஞ்சம் வைக்கோலைக் கொண்டுபோய்ப் போட வேண்டாமோ?” என்று உருகினாள்.

“அவள் சாப்பிடுகிறாள், அம்மா!” என்றார் அந்தப் புண்ணியவான்.

“எத்தனை நாழியாச் சாப்பிடுவது? சமைப்பதை அப்படியும் இப்படியுமாக ஆளுக்குக் கொஞ்சம் காட்டி விட்டு, கடைசியில எல்லாவற்றையும் அவளே விழுங்கி வைக்க வேண்டுமென்றால் அத்தனை நாழிதான் ஆகும்!” என்றாள் அவள்.

எப்படியிருக்கிறது, நியாயம்? நமது நாட்டில் சாதாரணமாக எல்லாப் பெண்களுமே கடைசியில் சாப்பிடுவதுதான் வழக்கம். நானும் அப்படித்தான். எல்லோருக்கும் போக ஏதாவது மிஞ்சினால் உண்டு; இல்லையென்றால் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/45&oldid=1149872" இலிருந்து மீள்விக்கப்பட்டது