பக்கம்:ஒரே உரிமை.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

குழந்தையின் குதூகலம்

வானத்துக்குமாக விரிந்து கிடந்த அவருடைய பரந்த மனம்தான் என்றாலும் இன்னொரு விசேஷ காரணமும் இருந்தது. “கடலையெண்ணெயை நல்லெண்ணெயாக்குவது எப்படி?” - “ஒரு மணங்கு தேங்காயெண்ணெயில் எவ்வளவு கடலையெண்ணெய் சேர்க்கலாம்?” – “எடையைக் கூடுதலாக்க என்னத்தைப் போட்டுக் கரைப்பது?” என்பது போன்ற விஷயங்களில் மணியின் தகப்பனாருக்கு முப்பது வருட கால அனுபவம் உண்டு. அந்த முப்பது வருட கால அனுபவத்தையும் அவர் வேறு எங்கிருந்தும் அடைந்து விடவில்லை; கதிர்வேலு நாடார் கடையிலிருந்தே தான் அடைந்திருந்தார்.

நல்லவேளையாக, நாடார் எந்த விஷயத்திலுமே கண்டிப்பாக நடந்து கொள்பவராதலால், விளக்கெண்ணெய் வியாபாரத்தை மட்டும் வைத்துக் கொள்ளவில்லை.

மேற்கூறியபடியெல்லாம் செய்வது பாவம் என்பதைக் கதிர்வேலு நாடார் அறியாமலிருந்தார் என்று சொல்லி விடவும் முடியாது. ஆனால் “அந்தப் பாவத்துக்குத் தண்டனை இந்த ஜன்மத்திலா கிடைக்கப் போகிறது? அடுத்த ஜன்மத்தில் தானே!” என்ற தைரியம் அவருக்கு.

இந்தத் தைரியம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவருக்குக் கொஞ்சம் அச்சமும் இருக்கத்தான் இருந்தது. அதற்காக, அவர் சர்க்கார் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் லஞ்சத்தோடு லஞ்சமாக, சுவாமிகளுக்கும் அவ்வப்போது கும்பாபிஷேகம் செய்து வைப்பது, லட்ச தீபம் ஏற்றி வைப்பது, திருவிழா நடத்துவது—இம்மாதிரி ஏதாவது செய்து, ‘அடியார்க்கு நல்லாராய், அன்புக்கும் ஆண்டவனுக்கும் அடிமையாய், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியாராய், சத்தியமே உருவாய்’ பராபரத்தின் அருளால் வாழ்ந்து வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/54&oldid=1148965" இலிருந்து மீள்விக்கப்பட்டது