பக்கம்:ஒரே உரிமை.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைமேல் பலன்

81


இந்த இரு நூற்றுச் சொச்சம் பேருடைய வயிறுகளையும் சென்ற மகாயுத்தத்தின் போது தோன்றிய பஞ்சம், சமதர்மவாதிகளாக மாற்றிவிட்டது. தங்களுக்குத் தெரியாமல் சமதர்மவாதிகளாக மாறிவிட்ட தங்கள் வயிறுகளைத் தேசியவாதிகளாக மாற்ற அந்த அப்பாவித் தொழிலாளிகள் பெருமுயற்சி செய்தனர். அந்த முயற்சியில் அவர்கள் ஒரு வருஷம் வெற்றி யடைந்தனர்; இரண்டு வருஷங்கள் வெற்றி யடைந்தனர்; மூன்று வருஷங்கள் வெற்றியடைந்தனர். அதற்குமேல் அவர்களுடைய முயற்சி பலிக்கவில்லை; அந்தப் பாழும் வயிறுகள் அத்தனையும் 'அசல் சமதர்மவாதி'களாகவே மாறி, நிலைத்து நீடித்து நின்றுவிட்டன!

இதன் பயனாகத் தங்களுக்குச் சம்பள உயர்வுவேண்டு மென்று கோரி, முதலில் அவர்கள் முதலாளிக்கு 'நோட்டீஸ்' விடுத்தனர். முதலாளிகளின் சம்பிரதாயத்தை யொட்டி அந்த 'நோட்டீஸ்' காற்றில் பறக்க விடப்பட்டு விடவே, தொழிலாளிகள் கடவுளுக்கு அடுத்தபடியாக இருந்த வேலை நிறுத்தத்தில் இறங்கினர்; கடவுளைப் போல் வேலை நிறுத்தம் தங்களைக் கைவிடாதென்றும் அவர்கள் நம்பினர். அப்படி நம்பியவர்களில் ஒருவன்தான் சின்னப்பன்.

வேலை நிறுத்தம் ஆரம்பித்து விளையாட்டுப் போல் இரண்டு மாதங்களாகிவிட்டன. சர்க்கார் வழக்கம் போல் அந்த வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோத மாக்கிவிட்டுப் பேசாமலிருந்தனர். தொழிலாளிகள் இந்த இரண்டுமாத காலமும் கூட்டம் கூட்டமென்று கூட்டினர்; பேச்சுப் பேச்சென்று பேசினர்; தீர்மானம் தீர்மானமென்று நிறை வேற்றினர்—எந்த விதமான பலனும் இல்லை.

இருந்தாலும் அவர்கள் சளைக்கவில்லை; "வெற்றி நமதே!" என்று கோஷித்துக் கொண்டு வீதியெல்லாம் சுற்றிச் சுற்றி வந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/83&oldid=1149335" இலிருந்து மீள்விக்கப்பட்டது