பக்கம்:ஒரே உரிமை.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருவேப்பிலைக்காரி

91


அவசரத்தில் நான் அதைத் தூண்டிவிடும் போது, அது சில சமயம் என் கை விரல்களைத் தீண்டிவிடும்: 'அப்பப்பா!' என்று துடித்துப் போவேன். அதுதான் சமயமென்று கஞ்சித்தண்ணீர் வேறு என் காலில் கொட்டிக் கொண்டு விடும்; பச்சைத் தண்ணீரைக் கைமேலும் கால் மேலும் கொட்டியவண்ணம் பதை பதைத்துப் போவேன்.

இந்தச் சமயத்தில், "என்ன, லலிதா! ஏதாவது கொண்டு வருகிறாயா? இல்லை, நான் போகட்டுமா?" என்று அவர் வெட்டு ஒன்றும் துண்டு இரண்டுமாகக் கேட்பார்.

அவர் அவ்வாறு கேட்கப் பிறந்தவர்; கேட்கலாம். "இப்பொழுது ஒன்றும் கொண்டு வருவதற்கில்லை; நீங்கள் போகலாம்!" என்று நான் பதிலுக்குச் சொல்ல முடியுமா? —அவ்வாறு சொல்ல நான் பிறந்தவளல்லவே?—நான் மட்டும் என்ன, எங்கள் வர்க்கமே அவ்வாறு சொல்வதற்குப் பிறந்ததல்லவே!

ஆகவே, "இதோ வந்து விட்டேன்!" என்று எல்லாவற்றையும் ஆவி பறக்கப் பறக்க எடுத்துக் கொண்டு கூடத்தை நோக்கி ஓட்டமாய் ஓடுவேன். அவர் தம்முடைய காரியங்களை யெல்லாம் முடித்துக் கொண்டு, நைவேத்தியத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கல்லுப் பிள்ளையாரைப் போல் உட்கார்ந்திருப்பார். இலையைப் போட்டு எல்லாவற்றையும் பரிமாறிய பிறகு, நிமிர்ந்து நின்று எரியும் கையை வாயால் ஊதி ஊதித் தணிக்கப் பார்ப்பேன். அதற்காக அவர் "ஐயோ, பாவம்!" என்று பச்சாதாபப் படுவார் என்கிறீர்களா? அதுதான் கிடையாது. "அவ்வளவு அஜாக்கிரதை" என்று கடிந்து கொள்வார்!

இன்று நான் விழித்த வேளை நல்ல வேளை போலிருக்கிறது. மேற்கூறிய விபத்து எதுவும் இன்று எனக்கு நேரவில்லை; குழந்தை ராதையும் மணி பத்துக்கு மேலாகியும் தொட்டிலை விட்டுக் கீழே இறங்கவில்லை. அவள் தன் பாட்டுக்குத் தொட்டிலுக்கு மேலே கட்டித் தொங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/93&oldid=1149358" இலிருந்து மீள்விக்கப்பட்டது