பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

ஒலிம்பிக் கதையின் மூலமாக உலக தத்துவத்தை உண்மை வாழ்க்கை முறையை, சிறந்த கல்வி அமைய வேண்டிய நிலையை ஆசிரியர் அழகாகக் கூறிச் செல்கின்ற கருத்தாழங்கொண்ட கருவூலமாக 'ஒலிம்பிக் பந்தயத்தின் கதை' எழுதப் பெற்றிருக்கிறது. கிரேக்கத்தின் பழைய பழங் கதைகளை, சான்றுகளுடன் தொகுத்து. தொடர்பாகவும் படிக்கப் படிக்கத் தெவிட்டாது சுவையாகவும், மனதைக் கவரும்படியாகவும், அழகுத் தமிழில், எளிய நடையில் சொற் கோர்வையுடன், 'உடற்கல்வி ஆசிரியர்களும் எழுதுவதில் வல்லவர்கள்' என்று எடுத்துக்காட்டி, ஆசிரியர் அற்புதமாக இக் கதையை எழுதியுள்ளார்.

மல்லிகைப் பூ மலரும்போது மணக்கும்; மகிழம் பூவோ மலர்ந்தாலும் வாடினாலும் மணக்கும், மகிழ்விக்கும். நண்பர் நவராஜ் செல்லையா எழுதிய இந் நூலைப் படிக்கும்போதும் படித்து முடித்த பிறகும்கூட இனிக்கும். நெஞ்சில் நிலைத்து நிற்கும்.

விளையாட்டு சம்பந்தமான நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வதோடுமட்டுமல்லாமல், இனிய தமிழ் நடைகொண்ட ஓர் இலக்கிய நூலைப்படித்தோம் என்ற மன நிறைவு எனக்கு உண்டாவது போலவே, தமிழறிந்த சான்றோர்களையும் விளையாட்டுத்துறை தொடர்பான ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் இந் நூல் மகிழ்விக்கும் என்பது என் துணிபு.

இன்னும் பல இனிய நூல்களை உருவாக்கித்தர நண்பர் நவராஜ் செல்லையாவை வாழ்த்துகிறேன். அரிய முயற்சியைப் பாராட்டுகிறேன்.

V. M. இரகுபதி
முன்னாள் உடற் கல்வித் தலைமை ஆய்வர்
சென்னை - 6, தமிழ்நாடு