பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பராசக்தி வாள் !

மன்னர் மன்னன் குணேந்திரபாலனின் ராஜ்யம் அப்பொழுது அமளி துமளிப்பட்டது. அந்தச் செய்தி, ராஜ்யத்தின் நாடு நகரம்: காடு கழனி முதலிய எல்லாப் பகுதிகளிலும் காட்டுத் தீ போலப் பரவி விட்டது. செய்தி அறிந்த குடிப்படைகள் கண் கலங்கினர்; இதயம் துடித்தனர்.

அந்தச் செய்தி இதுதான்:

...மன்னர் மன்னன், இருபது ஆண்டுக்ளுக்கு முன்னர் இந்திர விழாவில் காணாமல் போய்விட்ட, தன் ஒரே மைந்தன் இளவரசன் ராஜேந்திரபாலனின் பிரிவை இனியும் தாளாதவராகப் படுத்த படுக்கையில் கிடக்கிறார், அவருடைய இழந்த மகனை மீண்டும் அவர் கண்முன் ஒப்படைப்பவர்களுக்கு அவரது வமிச வழிவந்த மந்திர சக்தி வாய்ந்த பராசக்தி வாளும், அபரீமிதமான பொன்னும் வழங்கப்படும். மகன் இல்லையேல் மன்னரை நாடு இழக்க வேண்டியதுதான்...!"