பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

55


ஜீவராசிகளும் வருகை தந்தன. மனிதர்கள் வாழும் இடங்களுக்கும் ஒலைகள் அனுப்ப ஏற்பாடு செய்யும்படி ஆணை இட்டது நரி ராஜா. ஆனால் ஏனோ மனிதர்களில் ஒருவர்கூட முடிசூட்டு வைபவத்துக்கு வரவில்லை.

இதை அறிந்த நரியார் மனிதர்களின் இத்தகைய அவமரியாதை நடப்புக்கு விளக்கம் கோரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தனது அந்தரங்கக் காரியதரிசியான நாயிடம் தெரிவித்தது. அது சாமான்யமான நாயல்ல; துப்பறியும் நாய் ஜாதி!

முடிசூட்டும் வைபவம் நடந்தது. நரியாருக்குத் தலையில் கிரீடம் சூட்டப்பட்டபோது எல்லாக் குடிபடைகளும் பலத்த ஆரவாரத்துடன் கை தட்டின. ஆனால் ஒருவரிசையில் இருந்த காக்கைக் கூட்டம் மாத்திரம் கை தட்டவில்லை. அக் காக்கையின் பிரதிநிதி வெகு ஆணவமாக சபையின் மேல் மாடப் பொந்தொன்றில் வீற்றிருந்தது. இதைக் கண்ட நரி ஆத்திரம் அடைந்தது. அதன் பற்கள் துடித்தன. தந்திர மூளை மிகவும் ஆத்திரப்பட்டது. ஆனாலும், விழாவில் ரசாபாசம் எதுவும் நிகழக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தது நரி. காரணம் இதுதான் புரட்சி நடத்தி, ஜன. நாயக ஆட்சியை மனிதர்கள் உலகினைப்போல நடத்தத் தொடங்கிவிடும் வனவிலங்குகள் என்ற பயம் அதற்கு உள்ளூற இருந்தது.