பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

97

அவன் பெயர் அவன் நெற்றியில் எழுதப்பட்டிருந்தது. அதாவது அவனுடைய முறுக்கு மீசையும் மசால்வடை கிர்தாவும் புளியங்கொட்டைப் பற்களும் சோடாப் புட்டிக் கண்களும் அவனை இன்னாரென்று எனக்குத் தெரிவித்தன. நான் உஷார் ஆனேன்.

அந்தக் களவாணி விநாயகப் பெருமானுக்குத் தேங்காய் உடைத்தான். சூடம் காட்டினான்; “அப்பனே! எனக்கு மாமூல் வரும்படியைக் கொடுத்துவிடு. நானும் உனக்குச் செலுத்த வேண்டிய மாமூல் காணிக்கையைச் செலுத்தி, விடுகிறேன்!” என்று கும்பிட்டான்.

எனக்கு அது வேடிக்கையாகவும் வினையாகவும் பட்டது.

பின் என்னவாம்?

திருடுபோகாமல் எங்கள் பணம் காசைக் காப்பாற்றும் படி சற்றுமுன் இதே பிள்ளையாரிடம் நான் வேண்டுதல் செய்து கொண்டேன்.

ஆனால் இதோ, திருடன் ஒருவன் தனக்கு நல்ல வரும்படி கிடைக்கும்படி இதே சாமியிடம் பிரார்த்தனை செய்கிறானே?

அப்படியென்றால், பிள்ளையாருக்கு சூது செய்வதில் வல்லமை பெற்ற இதே பிள்ளையாருக்கு உலக நடப்பின் உண்மை-பொய் தெரியாமலா இருக்கும்?