பக்கம்:ஓங்குக உலகம்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிஞரும் ஆவர்

101


அவ்வூர்ப் பஞ்சாயத்துக் குழுவின் தலைவரும் என்னுடன் பயின்றவருமான திரு. தேவராசன் தலைவராகவும் நான் செயலாளனாகவும் பிற உறுப்பினர்களும் கொண்ட குழு அமைக்கப்பெற்றது. எங்கள் இருவருக்கும் உற்ற நண்பரான பேரறிஞர் அண்ணா அவர்கள் அப் பள்ளிக்கென இரு நாடகங்கள் நடத்தி, அவற்றின் வருவாயினை அளித்தனர். (இது பற்றி என் இரு நூல்களிலும் கட்டுரைகளிலும் குறித்திருக்கிறேன்.) திரு தேவராசன் சென்னையில் வாணிபம் நடத்திவந்தார். நானும் பச்சையப்பரில் பணி ஏற்று அதற்குச் சற்று முன்தான் (1944) சென்னை வந்தேன். அவருடைய வீட்டில் (கோவிந்தப்ப நாயக்கன் தெரு 182 என எண்ணுகிறேன்) நாங்கள் இருவரும் அண்ணா அவர்களும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். அதற்கு முன்பே-இளமை தொட்டே அண்ணாவும் நானும் ஒன்றிய நண்பர்களாக இருந்து வந்தோம். காஞ்சியில் எங்கள் இரு அலுவலகங்களுக்கும்-திராவிட நாடு-தமிழ்க் கலை-நெருங்கிய தொடர்பு உண்டு. அப்போது நமது மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணாவைக் காண அடிக்கடி கோவிந்தப்ப நாயக்கன் தெரு வீட்டிற்கு வருவார்; வந்து அவர் முன் கைகட்டியே நின்றிருப்பார். ‘உட்கார்’ என்று அண்ணா சொன்னாலும் உட்காரமாட்டார், அண்ணாவின் முன் அவர் உட்கார்ந்து நான் பார்த்ததே இல்லை.

அண்ணா அவர்களின் கட்சி வளர்ச்சிக்குப் பொருளை வாரி வழங்கியவர் இருவர், ஒருவர் எம். ஜி. ஆர்; மற்றவர் தேவராசன். ‘நாளை எனக்குக் கட்சிச் செலவுக்காக இவ்வளவு வேண்டுமே’ என்பார் அண்ணா அவர்கள். மறுநாள் ‘எம்.ஜி.ஆர்.’ பணத்துடன்தான் வருவார். இவ்வாறு அந்த நாளிலேயே அள்ளி வழங்கிய வள்ளலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/104&oldid=1127780" இலிருந்து மீள்விக்கப்பட்டது