பக்கம்:ஓங்குக உலகம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு நலமுற

13



2. நாடு நலமுற


‘எல்லாரும் இன்புற்றிருக்கும்’ சமுதாய வாழ்வுக்கு அன்றுதொட்டு இன்றுவரை உலகுக்கு வழிகாட்டிவரும் நாடு நம் பாரதநாடு. ‘பாரத நாடு பழம்பெருநாடு, பாடுவம் இதனை எமக்கிலை ஈடு’ என்று பாரதி எக்களித்துப் பாடி இதன் பெருமையை விளக்கினார். வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு, இன்றுவரை எத்தனையோ அறிஞர்களும், அறிவர்களும், தவசிகளும், தம்மைப்போல் பிறரை ஒத்துநோக்கி உலகை ஓம்பிக் கர்த்த சான்றாண்மை மிக்கவர்களும் நம் நாட்டில் தோன்றி நாட்டையும் உலகையும் நடத்திச் சென்றனர். அவர்கள் சொல்லிச் சென்ற-எழுதிச் சென்ற-பல சாத்திரங்கள் என்றென்றும் உலகுக்குப் பல உண்மைகளை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. ஆன்மீக நெறியில் மட்டுமன்றி, சமுதாய வாழ்க்கை நெறி, அறிவியல் நெறி ஆகிய பல வழிகளிலும் அவர்தம் எழுத்துக்கள் அமைகின்றன. இன்றைக்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டுச் சான்றோர்கள் கூறிச் சென்ற பல சமுதாய அறிவியல் கருத்துக்கள் இன்று உலகவாழ்வில் மெய்ம்மையாக்கப் பெறுகின்றன. மேலைநாட்டுப் பொருட்காட்சிகளில் நம் நாட்டுப் பழம்பெரும் எழுத்துக்கள் உண்மையாக்கப் பெறுவதைக் காண்கின்றோம். (நம்மை நாம் அறியாத காரணத்தாலேயே இன்று, எதைஎதையோ புதுமைகளாக எண்ணிப் பூரிப்படைகின்றோம்) இத்தகைய பழம்பெரும் பாரதபூமி வற்றா வளமும் வணங்கா உரமும் கொண்டு வாழ்ந்த நாட்கள் பலப்பல. ஆனால் இடைக்காலத்தில் ஒருசில நூற்றாண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு உழன்று அவதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/16&oldid=1127541" இலிருந்து மீள்விக்கப்பட்டது