பக்கம்:ஓங்குக உலகம்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா

71


கேளாமலேயே என்னை அத் தமிழ்த்துறைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தார். அங்கிருந்து உத்தரவு வந்தபோது அவர்களைக் கண்டு கேட்க, ‘நீங்கள் சொன்னால் போகமாட்டீர்கள் என்பது தெரியும்; எனவே சொல்லாமல் அனுப்பினேன்’ என்றார்கள். அவர் அன்பறிந்து அங்கேசென்று பணியாற்றினேன். அங்கிருந்த துணைவேந்தர் அவர்கள் என் பணிகண்டு மேலும் தொடர்ந்து சில ஆண்டுகளாயினும் இருக்கவேண்டும் எனக் கேட்டு, தமிழக அரசுக்கும் கடிதம் எழுதினார். அப்போது அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். நான் ஏப்பிரல் விடுமுறையில் அவர்களைக் காணச் சென்றேன். அவர்கள் உதகை சென்றிருந்தனர். அங்கே விருந்தினர் மாளிகையில் கண்டு மகிழ்ந்தேன். அவர்களே அரசாங்கத்துக்கு என்னைப்பற்றி வந்திருந்த தகவலைச் சொல்லி, ‘இனி நீங்கள் அங்கே போக வேண்டாம்; இங்கே உங்களுக்கு நிறையப் பணி காத்திருக்கிறது’ என்று சொன்னதோடு, என்னை அனுப்ப இயலாதென அவர்களுக்கும் தெரிவிக்க ஏற்பாடு செய்துவிட்டனர். ஆம்! அவர்கள் என்வழியே தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் பல செய்ய நினைத்தார்கள். ஆனால் அதற்குள் அவர் வாழ்வின் எல்லை வற்றிவிட்டது; கண்ணீர் பெருகுகின்றது.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறுபவருக்கு, அக்காலத்திலெல்லாம் பட்டமளிப்பு விழா நடத்தி, அனைவரையும் வரவழைத்து ஒன்று கூட்டி உரையாற்றிப் பட்டமளித்தல் மரபு. அண்ணா அவர்கள் அவ் விழாக்களில் பட்டம் பெறுவோர் அனைவர் கையிலும் பட்டச் சான்றிதழோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பெற்ற திருக்குறளும் இருக்குமாறு ஏற்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/74&oldid=1127533" இலிருந்து மீள்விக்கப்பட்டது