பக்கம்:ஓங்குக உலகம்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

ஓங்குக உலகம்


முதல்வராகும் நிலைக்கு உயர்த்தினர். பின் பல்கலைக் கழகத்தின் தலையீட்டால் அந்நிலை இடர்படினும் இறுதியில் இவர் முடிவு ஏற்றுக்கொள்ளப் பெற்றது. உஸ்மானியா, தில்லி, லக்னோ, பஞ்சாப் ஆகிய இடங்களில் தமிழ்த்துறை அமைய இவரே முதற் காரணர் என்பது உண்மை. இவ்வாறே பலவகையாய் இவர் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளார்.

கோலாலம்பூரில் மலேயாப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலத்தில் இந்திய மொழித்துறைக்கு எந்த மொழியை அமைப்பது என்று கேட்டனர். அது பற்றிச் சென்று சண்டுவந்த பெரியவர், அம்மொழி ‘வடமொழி’ யாகத்தான் இருக்கவேண்டும் என இந்திய அரசுக்குத் தெரிவித்தனர். ஆயினும் அன்று தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூராரும் திரு பக்தவத்சலமும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை அழைத்து உடன் மலேயா செல்ல வேண்டும் என ஆணையிட்டார் பக்தவத்சலம் அவர்கள். 1948ல், அவர்கள் ஆணையினை ஏற்று, மலேயா முழுவதும் சுற்றிச் சுமார் இரண்டு மாதங்கள் இருந்து உண்மை கண்டு இந்தியத்துறைக்குத் தமிழே இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்தினேன். அப்படியே அங்கே தமிழ் இடம்பெற்று, இன்றும் சிறந்து வாழ்கிறது. இதை நினைவில் வைத்த மலேயா நாளிதழ் ‘தமிழ் நேசன்’ நான் 1985ல் அங்கே சென்றபோது, முதல் பக்கத்தில் பெரிய தலைப்பில், ‘மலேயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வேண்டுமென்று வற்புறுத்திய பேராசிரியர் வருகை’ என்று என் புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டது. எனவே மலேயா பல்கலைக் கழகத்தில் தமிழ் இடம் பெற்றமைக்குரிய பெரும் பங்கு இவரையே சாரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/97&oldid=1127598" இலிருந்து மீள்விக்கப்பட்டது