பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

துடித்தது ஆனால் அவள் பெண். இயல்பான வெட்கம் ஆசைக்கு அணைபோட்டது.

தந்தை வெற்றிகரமாக வியாபார ஒப்பந்தத்தைப் நினைத்து பூரிப்பது போலப் பேசிக்கொண்டு போனார். தன்னுடைய வாழ்க்கையையே பாதிக்கப்போகிற ஒப்பந்தம் பற்றி அவள் என்ன எண்ணுகிறாள் என்பதை அறிய அவருக்கு நினைவு எழவில்லை. அவர் சொன்னார்: ‘நிலம் புலம் வீடு வாசல் எல்லாம் இருக்கு. ஜட்கா வச்சிருக்கார். குதிரைகள் அடடா! என்ன அழகாக இருக்கு தெரியுமா? அஸ்வகதி என்பார்களே அந்த அழகை அவர் குதிரைகள் டக் டக் டக் என்று நடை போட்டு வரும்போது தான் காண முடியும். தெருவிலே போறவன் எவனுமே நின்று திரும்பித்தான் பார்க்கணும்.........'

தெருவிலே எதிர்ப்படும் எவனுமே நின்று பார்ப்பதுடன் கண்ணிலே கண்ணிடத் தவிக்கும்படி தூண்டுகிற வனப்பு பெற்றுள்ள அந்தக் குமரி கேட்க விரும்பினாள் - அப்பா, அவர் அழகாயிருப்பாரா அவருக்கு வயசு என்ன? அவர் யார்.

அவள் பெண். இன்னும் பதினேழு வயசு நிரம்பாத பருவமங்கை, இயல்பான வெட்கம் குறுக்கே நின்று தடை போட்டது அவள் ஆசைக்கு,

‘என்னம்மா ஒண்ணுமே சொல்ல மாட்டேன்கிறே? என்ன யோசனை?’ என்று கேட்டது தந்தையின் வாய்.

'ஊம்’ என்றாள் மகள். எப்படிச் சொல்வது தனது உள்ளத்து ஏக்கத்தை என்ற தவிப்பு அவளுக்கு.