பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வயிற்றுப் பசியினால் மட்டுமே ‘பாபங்கள்’ என்று கருதப்படுகிற செயல்கள் பிறக்கவில்லை. அவற்றுக்கு வகை செய்யும் வேறு பசிகளும் உண்டு. இயற்கையின் சிருஷ்டியான இந்தப் பசிகளுக்குச் சரியான ஆகாரம் கிடைக்காத போது தான் மக்கள் தறிகெட்டு அலைய நேரிடுகிறது

‘கிடைக்காத போது மட்டும்’ என்றும் சொல்லி விடுவதற்கு இல்லை. பார்க்கப் போனால், மக்கள் பசியை அடக்க வில்லை. பசிதான் மக்களை ஆட்டி வைக்கிறது! அது எந்த வகையான பசியாக இருந்தால் என்ன!

ஒவ்வொரு சிறு விஷயமும் வாழ்வை பாதிக்கிற பெரும் பிரச்னையாகி விடுகிறது-சமுதாயத்தை, உயிர்க்குல வளர்ச்சியை பாதிப்பதனால். ஆண் பெண் உறவு குடும்பப் பிரச்னையல்ல. சமுதாயப் பிரச்னை, உலகப் பிரச்னை, உயிர்க்குல மனோதத்துவப் பிரச்னை.

இவை சரியாக எடை போடப்பட்டு முடிவுகள் காணப்பட வேண்டும், சமுதாயத்தை - உயிர்க் குலத்தை ஒரளவுக்காவது அப்பழுக்கற்றதாக மாற்ற வேண்டுமானால், மனிதன் கடவுளாக வேண்டாம், அதிமனிதனாக வளர்வது கிடக்கட்டும். முதலில் மனிதன் மனிதனாக வாழவேண்டும். வாழ வகை செய்ய வேண்டும்.

அதற்குத் தடையாக உள்ள இழிதகைமைகளை, சிறுமைகளைக் களைய அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது சிந்தனையாளர்களின் கடமை. இலக்கியத்தின் ஜீவனே, இதய ஒலியே, அதாகத் தான்