பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓர் இரவு

97


வந்தபடி பேசறா!, மானம் போவுது.

ஆ : (கேலிச் சிரிப்புடன்) மானம் போகுதா? உனக்கா? ஏ அப்பா! மானம்னா, மணங்கு என்னா விலைன்னு கேட்கறவ நீ. மானம் போவுதா உனக்கு. என்னாடி வேதம், அதெல்லாம் என் கிட்டவே காட்டறே.

வே : காட்டறேன், நீ நோட்டு நோட்டா நீட்டுவேன்னு.

[வீதியிலே யாரோ வருவதைப் பார்த்து]

வாயை மூடு! அதோ எவனோ வருகிறான், பார்த்துக் கொள்ளு.

[பாதை ஓரம் செல்கிறான் ஆறுமுகம். எதிரே வரும் வாலிபனைப் பார்த்து]

ஆ : ஏன் சார், டயம் என்னாங்க?

வா : தெரியாதுங்களே, கடியாரம் இல்லை.

ஆ : எங்கேயோ உங்களைப் பார்த்த மாதிரியா இருக்கே?

வா : என்னையா? ஊஹூம் இருக்காதே.

ஆ : (யோசிப்பதுபோல பாசாங்கு செய்து) என்னா பிரதர்! ஒரே அடியா, என்னை முட்டாளாக்குறீங்க, நீங்க நம்ம பக்கத்து வீட்டு பாக்கியம்.

வா : எந்தப் பாக்கியம்?

ஆ : அவதான், தனபாக்யம். அவ வீட்டுக்கு வந்திருக்கறிங்களே, நீங்கத்தான். ஒரேயடியா மறைக்கறிங்களே. நான் பார்த்திருக்கறேன்.

வா : இல்லைங்க. நான் வந்ததில்லைங்களே.

ஆ : சும்மா, வாங்க. கூச்சப்படாமே. யாரு பார்க்கறாங்க இங்கே. வாங்க.

[வேதம் வீட்டு வாசற்படி வருகின்றனர் இருவரும் உள்ளே அழைத்துச் செல்கிறாள். ஒரு பழைய நாற்காலியிலே உட்கார வைக்கிறார்கள் வாலிபனை]

வா : இந்த மாதிரி வழக்கமே எனக்குக் கிடையாது. என்னமோ இன்னக்கி மனசு ஒரு மாதிரியா இருந்தது. அதனாலே....

வே : (வாலிபன் பக்கத்தில் நின்றுகொண்டு) இது சகஜந்தானுங்களே! என்னமோ கதைகூடச் சொல்வாங்க இல்லே, அப்பேர்க்கொத்த விசுவாமித்ரர்கூட ஒரு மேனகையைப் பார்த்து மயங்கினாருன்னு. ஊரிலே நடக்காத விஷயமா? இங்கே நம்ம வீட்டிலே, கண்டவங்க நுழையறது கிடையாதுங்க.