54
அறிஞர் அண்ணா
[தேவர் முகத்தி வறைந்துகொண்டு]
தே : சொர்ணம்! இந்தப் பாவியை மன்னித்து விடு. மாசற்ற உனக்கு நான் துரோகம் செய்தேன். மகா பாதகன் நான்.
சொ : அதற்குப் பரிசாகப் பகவான் உம்மை ஜெமீன் வீட்டு மருமகனாக்கினார். எனக்கும்தான். (மாளிகையைக் காட்டி) இந்த அந்தஸ்தை (தன் அலங்காரத்தைக் காட்டி) இந்த அலங்காரத்தைத் தந்தார்.
தே : சொர்ணம்! என்னை நீ எவ்வளவு கண்டித்தாலும் குற்றமில்லை. நான் செய்தது துரோகம்......
சொ : மாளிகையிலே. இத்தகைய துரோகங்கள் வெறும் நிலாச் சோறு.
தே : இந்தக் காதகனின் துரோகத்தால் இந்தக் கதிக்கு ஆளானாய். மாதரசி! உன் மலர் முகத்தை மறைத்துக் கொள். உன் அழகும் அலங்காரமும் என்னைக் கொல்கிறது. மறைந்து போ! என்னை மயக்க வந்த மின்னலே, மறைந்து விடு.
சொ : (கேலியாக) என் காதலர் கவியாகிவிட்டார்!
தே : கவியானேன்! பலன்! வாழ்க்கையிலே நான் அடைய வேண்டிய விருந்தை இழந்தேன். சொர்ணம்!
சொ : உயிரும் உடலும், மலரும் மணமும், நரம்பும் நாதமும் என்று, அன்று சொன்னீர். நம்பினேன். மோசம் போனேன், கைவிட்டீர், கவலையில் மூழ்கினேன்: கண்ணீர் பொழிந்தேன்; யார் இரக்கம் காட்டினார்கள்; இந்தக் கைம் பெண்ணிடம்? சுற்றாத கோயில் இல்லை! பூஜை, விரதம் என்று தவறவில்லை. என் மணாளர் என்னை ஏற்றுக்கொள்வார். மறுபடியும் வருவார், என்னைப் படுகுழியில் தள்ளமாட்டார் என்று நம்பினேன்....நெடுநாள் வரையிலே.
ஒரே ஒரு நாள், உலகின் முன்பு, பகிரங்கமாக. "ஆமாம்! சொர்ணம் என் மனைவிதான்" என்று சொல்லிவிடட்டும். அது போதும். பிறகு விஷம் கொடுத்துச் சாப்பிடு என்று கூறினாலும் துளிகூடச் சஞ்சலமின்றிச் சாப்பிடலாம், என்றுகூட நினைத்தேன்.
கோயில் சுற்றிச் சுற்றி நான் கண்ட பலன் என்ன?